Breaking
Sat. Apr 27th, 2024

ஹமீது மரைக்கார் (கலீபா மாமா) அவர்களின் மறைவு மிகவும் கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அனுதாபச் செய்தியில்,

“மறிச்சுக்கட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஹமீது மரைக்கார், 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம், இஸ்மாயில்புரம், நியூ சிட்னி முகாமில் தங்கியிருந்த போது, அந்த முகாமுக்குத் தலைமைதாங்கி, அங்கிருந்த மக்களை சிறந்த முறையில் வழிநடாத்தினார். அதன் பின்னர் நியூ சிட்னி மக்களுக்கென தனியான மீள்குடியேற்ற கிராமம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று முன்னின்று செயற்பட்ட அவர், அந்த மக்களுக்காக வேப்பமடுவில் ஒரு மாதிரி கிராமத்தை அமைப்பதற்கும் எமக்கு பக்கபலமாக இருந்து, பூரண ஒத்துழைப்பை வழங்கியவர்.

அத்துடன், 2009ஆம் ஆண்டு மன்னார், மறிச்சுக்கட்டி மக்களின் மீள்குடியேற்றத்தின் போது எமக்கு உறுதுணையாக நின்றார். மறிச்சுக்கட்டி கிராமத்தை மீள்கட்டமைப்பு செய்வதில் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. மேலும், அந்த மக்களுக்கு அரை ஏக்கர் காணியை பெற்றுக்கொடுக்கும் விடயத்திலும் மும்முரமாகச் செயற்பட்டவர். புதிய பாடசாலை மற்றும் பள்ளிவாசல் உருவாக்கம் உள்ளிட்ட இன்னோரன்ன விடயங்களில் பூரண பங்குதாரராக, ஒரு முதன்மை மனிதராக நின்று செயற்பட்ட பெருந்தகை.

மறிச்சுக்கட்டி மட்டுமல்லாது கரடிக்குளி, பாலைக்குளி, முள்ளிக்குளம் போன்ற கிராமங்களின் மீள்குடியேற்ற விடயங்களிலும் கூட எமக்கு பக்கபலமாக இருந்தவர். அது மாத்திரமின்றி, அரசியல் ரீதியாகவும் தொடர்ந்தேர்ச்சியாக எமது அனைத்து செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக நின்றவர்.

அவரது புதல்வரான சமூர்த்தி அதிகாரி மர்ஹூம் இக்பால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினராக இருந்து, அந்த ஊருக்கும் மக்களுக்கும் சேவை செய்தவர்.

மர்ஹும் ஹமீது மரைக்கார் அவர்கள் மார்க்க அறிவைக் கற்றுத் தேர்ந்தவர். அமல், இபாதத்துக்களில் அதிகம் ஈடுபாடுகொண்டவர். அனைவரோடும் இன்முகத்துடன் பழகக்கூடிய பண்பாளர். ஊர் மக்களுக்குச் சேவை செய்வதையே முழுமூச்சாகக் கொண்டவர்.

அன்னாரின் இறுதிக் காலங்களில் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். பலமுறை அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்!

அன்னாரின் மறைவு மண்ணுக்கும் மக்களுக்கும் பேரிழப்பாகும்.

அவரது குடும்பத்தினருக்கு மன ஆறுதலை வழங்க இறைவனை பிரார்திக்கின்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ்! அன்னாரின் சேவைகளையும் நல்லமல்களையும் பொருந்திக்கொண்டு, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவன பாக்கியத்தை நல்குவானாக ஆமீன்..!

Related Post