Breaking
Sat. May 18th, 2024
உயர்தர தேசிய தொழில்நுட்ப கணக்காய்வாளர் டிப்ளோமா மாணவர்களின் போராட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக அந்த மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பித்த முறைப்பாட்டின் மீதான விசாரணை இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்த விசாரணை நேற்று முன்தினம் காலை எடுக்கப்படவிருந்த போதிலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸார் சிலர் விசேட கடமையொன்றுக்கு செல்லவேண்டியிருந்ததால், வேறொரு தினத்துக்கு அந்த விசாரணையை ஒத்திவைக்குமாறு விடுத்த வேண்டுகோளுக்கமைய விசாரணை இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று முன்தினம் ஆணைக்குழுவின் முன்னால் பிரசன்ன மாகுமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்புக்கு இணங்கி பதில் பிரதி பொலிஸ்மா அதிபரும் மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான பூஜித ஜயசுந்தர, கொழும்பு பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காமினி மத்துரட்ட, கொழும்பு மத்திக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பிக்க சிறிவர்தன ஆகியோர் உட்பட கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, பொரளை, தெமட்டகொடை மற்றும் கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் ஆணைக்குழுவின் முன் பிரசன்னமாகியிருந்தனர்.

இவர்கள் ஆணைக்குழு காரியாலயத்துக்கு வந்து சுமார் ஒரு மணித்தியாலயத்தின் பின்னர் மாணவப் பிரதிநிதிகள் அங்கு வந்தனர். விசாரணை இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, இரு சாராரும் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

அச்சமயம், நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பதில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் சிலர் அன்றைய தினம் விசேட கடமைகளுக்குச் சென்றிருந்தபடியாலேயே விசாரணையை ஒத்திவைக்குமாறு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *