Breaking
Sat. May 4th, 2024

கொழும்பு மாநகர சபையில், மத்திய அரசாங்கத்தின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் கூட அரசாங்கத்தின் நகர அபிவிருத்திப் பணிகளுக்கு கொழும்பு மாநகர மேயர் நன்கு ஒத்துழைப்புகளை வழங்குகின்றபோதிலும் வட மாகாண முதலமைச்சர் அபிவிருத்திப் பணிகளில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ விசனம் வெளியிட்டார்.

பத்தரமுல்ல, வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐ.நா. மனித  குடியிருப்பு செயல்திட்டத்தின் (யூ.என்.ஹபிடாட்) ஏற்பாட்டில் நடைபெற்ற “நகர மீள் எழுச்சி’ எனும் தொனிப்பொருளிலான செயலமர்வின் ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

நகர அபிவிருத்தி தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவங்கள் தொடர்பில் தமது உரையில் விரிவாக விளக்கமளித்த கோதாபய ராஜபக்ஷ, அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி பணிகளில் நகராட்சிகளது பங்களிப்பின் அவசியம் பற்றி ஒரு கட்டத்தில் பேசும் போது;
“சில நேரங்களில் துரதிர்ஷ்டவசமாக அரசியல் வேறுபாடு காரணமாக சில நகராட்சிகள் மத்திய அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டு பணியாற்றுவதில் தயக்கம் காட்டுகின்றன.

 எனினும் கொழும்பு மாநகராட்சியை பொறுத்த வரையில் அங்கு மத்திய அரசாங்கத்தின் எதிர்க்கட்சியினரே நிர்வாகத்தில் இருக்கின்ற போதிலும் அதன் மேயர் மத்திய அரசாங்கத்தின் பணிகளுக்கு குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைகளுக்கு சிறந்த ஒத்துழைப்பை நல்கி வருகிறார்.

பிரச்சினைகளை அடையாளம் காணுதல், திட்டமிடல் மற்றும் நிறைவேற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் அவர் சிறந்த ஒத்துழைப்பை வழங்குகிறார். இது சிறந்த உதாரணமாகும்.

ஆனால், வட மாகாணத்தில் முதலமைச்சர் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயற்படுவதில்லை. இதனால், இறுதியில் அப்பகுதி மக்களே பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, அமுலாக்க  நடவடிக்கைகளின் போது அரசியல் பேதங்கள் பார்க்காது மத்திய அரசாங்கத்துடனும் நகர அபிவிருத்தி அதிகாரசபையுடனும் ஒத்துழைத்து செயற்பட வேண்டும்.

இதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களை நகர அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பேற்க வேண்டும் என்று சில பிரதேச சபையினரிடம் தவறான கருத்து நிலவுகிறது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் வந்தால் நிதி கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்களாகவே அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு அங்கு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு பிரதேச சபைகளிடம் இருந்து மென்மேலும் கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஆனால், அவை சிலரது தவறான புரிதலின் பேரிலான கருத்தாகும்“ என்று தெரிவித்தார்.  இதேநேரம், 2020 ஆம் ஆண்டளவில் அரைவாசிக்கும் மேற்பட்ட மக்கள் நகர்ப்புறங்களில் தான் வாழப்போகிறார்கள் என்ற வகையில் கணிசமான நகரமயமாதலை சந்தித்துக்கொண்டிருக்கும் நாடு என்ற  ரீதியில் நகர மீள் எழுச்சி என்ற கோட்பாடானது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என்றும் கோதாபய ராஜபக்ஷ  இதன்போது சுட்டிக்காட்டினார்.  (TKL)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *