Breaking
Sun. May 19th, 2024

-ஜாவித் –

இலங்கை வாழ் முஸ்லிம் சமுகத்தினை சமய ரீதியாக முடக்கும் கைங்கரியத்திற்கு அடுத்த கட்டமாக அவர்களின் காணிகளையும் சுவீகரித்து இலங்கைவாழ் முஸ்லிம் சமுகத்தினை இந்த நாட்டில் எதுவுமற்ற ஒரு சமுகமாக ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கைகள் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கின்றன. இது ஒரு ஆபத்தான செயற்பாடுகளாகவே இருப்பதை காண முடிகின்றது.

இலங்கையின் கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் எதிரிரொலியாக பாதிக்கப்பட்ட மற்றொரு சமுகமாக முஸ்லிம் சமுகம் காணப்படுகின்றனர். இவர்கள் விடுதலைப் புலிகளால் மட்டுமல்லாது கடந்த கால அரசாங்கங்களால்கூட பல ஆண்டு காலமாக பல்வேறுபட்ட நெருக்குதல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் உள்ளாகி பல துன்பங்களை அனுபவித்து வருகின்ற ஒரு சமுகமாக இருந்து வருகின்றனர்.

இவ்வாறு விமோசனமின்றி துன்பத்தில் துவண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சமுகத்திற்கு ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் கைகொடுக்க வேண்டிய நேரங்களில் எல்லாம் அவர்களின் விடயத்தில் பாராமுகமாக செயற்பட்டு வந்த வரலாறுகளே இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தைக் குறிப்பிடலாம்.

யுத்தத்தல் பாதிக்கப்பட்ட சமுகத்திற்கு ஒரு அரசாங்கம் உள்நாட்டுச் சட்டங்களுக்கு அமைவாகவும், சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற விதிமுறைகளுக்கும், நிபந்தனைகளுக்கும் அமைவாக செயற்படாது தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டு செல்கின்ற போட்டித் தன்மை வாய்ந்த செயற்பாடுகளே அதிகம் இடம் பெற்று வருகின்றன. இதன் காரணமாகவே முஸ்லிம் சமுகம் இன்று மிகவும் மோசமான பின்னடைவுகளுக்கும், பிரச்சினைகளுக்கும் உள்ளாகி இருக்கின்றனர்.

யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் தாண்டியும், தற்போதைய தேசிய நல்லிணக்க கூட்டாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியான நிலையிலும் வடக்கிலிருந்து முற்றுமுழுதாக விரட்டப்பட்ட சமுகத்தின் மீள் குடியேற்ற விடயங்கள் உள்ளிட்ட சகல தேவைப்பாடுகளையும் உரிய முறையில் மேற்கொள்ளாத ஏமாற்றும் கைங்கரியங்களே இடம் பெற்று வருகின்றன.

இந்தச் சமுகம் இன்று அல்லது நாளை தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு ஏதாவது ஒன்றை அரசாங்கம் செய்யும் அதன் மூலம் தமது பூர்வீகங்களுக்குள் காலடி எடுத்து வைக்கலாம் என்ற ஆவலுடனும், ஆதங்கத்துடனும் தவிக்கும் மக்களாகவே காணப்படுகின்றனர். ஆனால் இவர்களின் ஆதங்கங்களையும், அங்கலாய்ப்புக்களையும் கண்டு கொள்ளாதா அரசும், அதன் அரசியல் தலைமைகளும் தத்தமது கட்சி அரசியல்களை முன்னெடுக்கும் அல்லது அதனை வளர்க்கும் முயற்சிகளும், பிரயத்தனங்களுக்குமே முன்னுரிமை கொடுக்கும் விடயங்களையே நாம் கண்டு கொள்ள முடிகின்றது.

இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமைகளுக்கு உட்பட்டுள்ள மக்களின் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்று அரசாலும், படைத் தரப்பினராலும், ஒருசில தனியார்களாலும் பிடிக்கப்பட்டும், சூறையாடப்பட்டும் இருக்கின்ற நிலைமைகள் இலங்கையின் அரசியலில் முஸ்லிம் சமுகத்தின் இருப்புக்களும், ஜனநாயக விழுமியங்களும் கேள்விக் குறியானதுடன் ஒரு ஆபத்தான நிலைமைகளுக்கு இட்டுச் செல்லப்படுவதையே நாளாந்தம் இடம் பெற்று வரும் சம்பவங்கள் அந்த மக்களை கவலை கொள்ளவும், அரசின் மீது விஷணங் கொள்ளவும் தூண்டி வருகின்றது எனலாம்.

வடக்காக இருக்கட்டும், கிழக்கா இருக்கட்டும் சிறுபான்மை மக்களை இலக்கு வைத்தே அவர்களின் காணிகள் குறிப்பிட்ட சில தரப்பினரால் கபளீகரம் செய்யப்படுகின்றன. இனவாதம் என்ற போர்வையில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமுகத்தின் சொந்தக் காணிகளுக்குள்கூட சிலைகளை வைத்து அத்து மீறுவதும், இந்தச் சமுகங்களை வலிந்து சண்டைகளுக்கு இழுத்து அவர்களை வன்துறையாளர்களாக ஆக்குவது போன்ற விடயங்களும் அவ்வப்போது இடம் பெற்று வரவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

இன்றைய சூழ் நிலையில் வடகிழக்கு முஸ்லிம்களின் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை அவர்கள் இடம் பெயர்ந்தார்கள், அப்பூமியில் கடந்த முன்று தஸாப்த காலமாக வாழவில்லை என்ற காரணங்களை அடிப்படையாக வைத்து அவற்றை அரச காணிகள் என்றும், வன வளப்பகுதிக்கு உரியவை என்ற தோரணையில் அவர்களின் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் இருந்தும் அவை பொய்யானது என்ற வகையில் நாடகங்களை அரங்கேற்றி அந்தச் சமுகங்களின் இருப்பிடங்களையும், விவசாயக் காணிகளையும் அரசுக்கு சுவீகரித்து கொள்கின்றமை அந்த மக்களுக்கு செய்யும் துரோகத்தனமான செயற்பாடுகளாகவே நோக்கப்படுகின்றது.

இவ்வாறான விடயங்களில் இனவாதிகளின் கையாற்களாக ஒருசில அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இருந்து வருகின்றமை தேவையற்ற வகையில் பிரச்சினைகள் பெரிதாகுவதற்கான ஒரு விடயமாகவும் இன்று பேசப்படுகின்றது. இவர்களின் திறணற்ற கணிப்பீடுகளும், அவதானங்களுமே பலரை பிரச்சினைகளுக்கு உள்ளாக்கி விட்டிருக்கின்றது எனலாம்.

இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் மட்டும் முஸ்லிம்களின் சுமார் 35,000 ஏக்கர் காணிகளை இழக்க வேண்டிய ஆபத்தான நிலையில் இருப்பதாக காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி சுட்டிக்காட்டியுள்ளமை அந்த மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. மேற்படி விடயம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுடன் இதற்கு இனவாத சக்திகளின் செயற்பாடுகளே காரணம் எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

மேற்படி விடயத்தினை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் அண்மையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஆர்.ஆர்.ரி ஆகிய அமைப்புக்கள் முஸ்லிம் சமுகத்தின் தற்போதைய பிரச்சினைகளை ஆராயும் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்த போது காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட முழு விபரங்கள் அடங்கிய ஆவணங்களை கையளித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் எட்டு இடங்களும் மன்னார் மாவட்டத்தில் ஒரு இடமமும் வனப் பாதுகாப்பு பகுதிக்கு உள்வாங்கப்பட்டுள்ளது மிகவும் துரோகத்தனமான ஒரு நிலையில் இந்த மக்களை ஓரங்கட்டும் செயற்பாடுகளாகவே நோக்கப்படுகின்றது. குறிப்பாக வடகிழக்கில் சிறுபான்மையாக உள்ள தமிழ் முஸ்லிம் சமுகத்தின் காணிகளே இனவாத சக்திகளின் கண்களுக்கு கிட்டுகின்றனவே தவிர பேரின சக்திகளுக்காக வடகிழக்கில் சிறுபான்மை சமுகத்தின் பூர்வீகங்களுக்குள் கடந்த அரசுகளில் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்ட காணிகளை வனவளக் குழுவோ அல்லது அரசோ கண்டு கொள்ளாதிருப்பது இந்த நாட்டில் ஜனநாயகம் இந்த தேசிய நல்லிணக்க அரசில் மீறப்பட்டுள்ளது என்பதனை காண முடிகின்றது.

சிறுபான்மை முஸ்லிம், தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளை அரசும், அதன் அதிகாரிகளும்; வனப்பாதுகாப்பு, தொல்பொருள் பகுதி என்ற தோரணையிலேயே சூறையாடும் நிலைமைகளுடன் பல தமிழ் முஸ்லிம் பகுதிகளில் மிக வேகமாக இடம் பெற்று வரும் சிங்கள குடியேற்றங்கள் போன்ற விடயங்கள் இந்த நாட்டில் சமாதானம், ஒற்றுமை போன்ற விடயங்களுக்கு மாற்றமான செயற்பாடுகளாகவே இடம் பெற்று வருகின்றன இவ்வாறான விடயங்கள் இருக்கும் வரை இலங்கையில் சமாதானம் என்ற விடயத்தினை கண்டு கொள்ள முடியாது என்பதனையே புலப்படுத்தி வருகின்றது.

வடக்கைப் பொருத்தவரை தமிழ் மக்களின் பறிபோன காணிகள் ஏதோ ஒருவகையில் அரசாங்கத்தினாலும், படைத்தரப்பினராலும் விடுவிக்கப்பட்டு வரும் விடயங்கள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அவை அந்த மக்களின் நேரடிப் போராட்டங்களாலும், அவர்களின் அரசியல் தலைமைகளாலும் ஆக்கபூர்வமான முறைமைகளில் அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களினதும், முயற்சிகளினதும் வாயிலாக இடம் பெறுகின்றதை காண முடிகின்றது. இவ்வாறான நிலையில் கடந்த புதன் கிழமை (25) அரசால் முல்லைத்தீவில் சுமார் 243 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டிருப்பதும் இங்கு சுட்டிக்காட்டலாம்.

ஆனால் வடக்கில் முஸ்லிம் சமுகத்தின் காணிப்பிரச்சினை என்பது இன்று வரை கேள்விக்குறியான விடயங்களாகவே இருப்பதுடன் இவர்கள் விடயத்தில் அரசாங்கம் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுத்து அவர்களின் காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைக்கப்படாதிருப்பதானது முஸ்லிம் சமுகத்தை அரசின் மீது சந்தேகங் கொள்ளச் செய்துள்ளமையே யதார்த்தமான சம்பவமாகும் எனலாம். மன்னார் மாவட்டத்தில்கூட பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் கடற்படை, மற்றும் இராணுவத்தினரால் முகாம்களுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளமையை இங்கு குறிப்பிடலாம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமுகம் என்ற வகையில் அவர்களின் காணிப் பிரச்சினை என்பது அவர்களின் இருப்போடு சம்பந்தப்பட்டது என்பதனால் கடந்தகால அரசுகள் விட்ட பிழைகளை தற்போதைய அரசும் தொடராமல் அதற்கான திட்டவட்டமான நிரந்தரத்தீர்வே முக்கியமானதாகும். கடந்த அரசுகளினால் விடப்பட்ட பிழைகள் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இன விரிசல்களையும், இனக்குரோதங்களையுமே ஏற்படுத்தியிருக்கின்றனவே தவிர இந்த இரண்டு சமுகங்களும் ஒற்றுமைப்படுவதற்கான விடயத்தில் தடங்கள்களே அதிகம் காணப்படுகின்றன.

சிறுபான்மை மக்கள் என்ற வகையில் தமிழ் மக்களோடு முஸ்லிம்களும் இந்த தேசிய நல்லாட்சியில் நல்லிணக்கமும், நம்பிக்கையும் மலர வேண்டும் என்ற நோக்குடனேயே தமது ஆதரவுகளை வழங்கி வருகின்றனர். ஆனால் ஒருசில இனவாதக் கும்பல்கள் தமது செயற்பாடுகளுக்கு பலதரப்பட்ட வகையில் தீனி போட்டுக் கொண்டிருக்கின்றனர். மற்றொரு புறம் சமாதானத்தை விரும்பும் தரப்பினர் தமது சமாதான மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் முழு மூச்சாக செயற்பட்டு வருகின்ற போதிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு முஸ்லிம் சமுகத்தின் காணிப் பிரச்சினைகளில் கவனஞ் செலுத்தாதிருப்தானது அந்த மக்கள் மத்தியில் பாரிய மன உழைச்சல்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த வகையில் வடகிழக்கில் பறிபோன முஸ்லிம்களின் பல ஆயிரக்கணக்கான காணிகள் விடயத்தில் அதீத கவனஞ் செலுத்தியுள்ள முஸ்லிம் அமைப்புக்கள் அரசாங்கம் புதிய அரசியலமைப்பில் சிறுபான்மை முஸ்லிம்களின் காணிகளைப் பாதுகாப்பதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு அதன் மூலம் இந்தச் சமுகத்தின் பிரச்சினைகளை கையாழப்பட வேண்டிய விடயத்தினை வழியுறுத்தியுள்ளமை அனைவராலும் வரவேற்கத்தக்க விடயமாக தற்போது பேசப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு முஸ்லிம்களின் காணி விடயத்தில் தீர்க்கமான தீர்வுகளை எடுக்க வேண்டும். 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்ட மக்களின் காணிகளே வடக்கில் பறிபோய் இருக்கின்றன. குறிப்பாக படைத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் மற்றும் அரசா காணிகள், வனவளப் பகுதிகளுக்கு உள்வாங்கப்பட்ட காணிகள் எல்லாம் அந்த மக்களின் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் இருக்கின்ற காணிகளாகும். இவ்வாறு மக்கள் வாழ்ந்த காணிகளை அடையாளங்கண்டு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையே இன்று எழுந்துள்ள பிரச்சினையாகும்.

எனவே பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளை திருப்பி வழங்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உரியதாகும். மக்களும் தமது காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய விடயத்தில் நம்பிக்கையிலேயே இருக்கின்றனர் என்பதனால் இந்த விடயத்தில் அசட்டையாக இருந்து மக்களின் பிரச்சினைகள் பூதாகாரமாக செல்வதற்கு இடமளிக்காது செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் விடுக்கின்றனர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *