Breaking
Mon. Apr 29th, 2024

உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை என்று பதவி விலகிச்செல்லும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ஐநாவின் பாதுகாப்புப்பேரவை மேலதிகமான பொறுப்புடனும் உடனுக்குடனும் செயற்பட்டிருந்தால், லட்சக்கணக்கான மனித உயிர்களை பாதுகாத்திருக்க முடியும் என்று தாம் உறுதியாக நம்புவதாக தெரிவித்திருக்கிறார் நவி பிள்ளை. பதினைந்து உறுப்பினர்களைக்கொண்ட ஐநாவின் பாதுகாப்புச்சபையில் பேசும்போது அவர் இதை தெரிவித்திருக்கிறார்.

சகித்துக்கொள்ள முடியாத மனித துன்புறுத்தல்கள், சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பாரதூரமாக மீறிய சம்பவங்களையும் அவற்றுக்கு நீண்டகால ஆபத்துக்களை உருவாக்கக்கூடிய நிகழ்வுகளையும் ஐநா பாதுகாப்புச்சபை இரண்டாம்பட்சமாக கருது செயற்பட்டதாக அவர் விமர்சித்திருக்கிறார்.

இதற்குக் காரணம், ஐநா பாதுகாப்புச்சபையின் உறுப்புநாடுகள் தத்தமது குறுகியகால பிராந்திய, அரசியல் தேவைகள், குறுகிய நோக்கில் வரையறுக்கப்பட்ட தேசிய நலன்களுக்கு பலசமயங்களில் முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டன என்று கூறினார் நவி பிள்ளை.

தமது ஆறு ஆண்டுகால பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் அவர் ஐநாவின் பாதுகாப்புச்சபையில் தமது இந்த விமர்சனக் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

உலகில் பல்வேறு நாடுகளில் நடந்துகொண்டிருக்கும் மோதல்களை தடுப்பது என்பது சிக்கலான ஒன்று தான் என்றாலும் அதை செய்யமுடியும் என்று நவி பிள்ளை நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த மோதல்கள் எவையுமே எந்த எச்சரிக்கைகளும் இல்லாமல் திடீரென்று ஒரே நாளில் தோன்றியவை அல்ல என்று தெரிவித்த நவி பிள்ளை, பல ஆண்டுகளாக, இன்னும் சொல்வதானால் பல தசாப்தகாலம் இந்த பிரச்சனைகள், மோதல்கள் எல்லாம் படிப்படியாக வளர்ந்தன என்று தெரிவித்த நவிபிள்ளை, இவற்றின் அடிப்படை மூலம் என்பது மனித உரிமைகள் தொடர்பான தீர்க்கப்படாத குறைகளே என்றும் கூறினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *