Breaking
Fri. May 17th, 2024

வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று (20) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

எதிர்வரும் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள், அலுமாரிகள் மற்றும் பாராளுமன்ற கட்டடத் தொகுதியின் அனைத்துப் பகுதிகளும் பாதுகாப்பு சோதனைக்குட்படுத்தப் படவிருப்பதாக அவர் கூறினார்.

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினமான வெள்ளிக்கிழமை பாராளுமன்ற வளாகத்துக்குள் வாகனங்கள் உள்நுழைவது தடுக்கப்படுவதுடன் பாராளுமன்ற பார்வையாளர் கலரிக்கு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் பாராளுமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் வருவதற்கு பிரதான நுழைவாயில்களில் விசேட வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் சபை வளாகத்துக்கு வெளியேயுள்ள வாகனத் தரப்பிடத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

பார்வையாளர் கலரிக்கு அனுமதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படுவதுடன், கலரிக்கு அழைக்கப்பட்டிருக்கும் விருந்தினர்களுக்கு ஐயந்திபுர நுழைவாயிலில் விசேட வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவற்றின் உதவியுடன் பாராளுமன்றத்துக்குள் அவர்கள் வரமுடியும். போக்குவரத்துப் பொலிஸார் மற்றும் பொலிஸாரின் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் அன்றைய தினம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.

இதேவேளை, வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 24ம் திகதி சமர்ப்பிக்கப்படவிருப்பதால் அதற்கு முன்னதாக பல சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற அமர்வுகள் நேற்று முதல் மூன்று தினங்கள் பின்னிரவுவரை நடைபெறவுள்ளது.

நேற்று இரவு 8.30 மணிவரை பாராளுமன்ற அமர்வுகள் நடைபெற்றிருந்ததுடன், இன்று இரவு 7.30 மணி வரையும், எதிர்வரும் வியாழக்கிழமை இரவு 9.30 மணிவரையும் பாராளுமன்றம் கூடவுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *