Breaking
Mon. Apr 29th, 2024
இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) போராளிகள் சிரியாவின் துருக்கி எல்லைப்புற நகரான கொபானியை மட்டுமன்றி ஈராக் தலைநகர் பக்தாதின் வாயிலில் இருக்கும் அன்பார் மாகாணத்தையும் முழுமையாக கைப்பற்றும் தறுவாயில் உள்ளனர்.
 
மாகாணத்தை காக்க அமெரிக்க தரைவழி படைகளை அனுப்பும்படி ஈராக் நிர்வாகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. பக்தாதிற்கு மேற்காக இருக்கும் “அன்பாரின் நிலைமை மிக மோசமாக உள்ளது” என்று அன்பார் மாகாண கௌன்ஸில் தலைவர் சபாஹ் அல் கர்ஹ{த் எச்சரித்துள்ளது.
 
ஐ.எஸ். போராளிகள் அன்பார் மாகாணத்தின் சுமார் 80 வீதமான பகுதியை தமது கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக அங்கிருந்துவரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்நிலையில் அன்பார் மாகாணத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி மிகப்பெரிய நகரான ஹதீதாவையும் ஐ.எஸ். சுற்றி வளைத்துள்ளது.
 
அன்பார் வீழும்பட்சத்தில் ஐ.எஸ். போராளிகள் சிரியாவின் ரக்காவில் இருந்து ஈராக் தலைநகர் வரையான எல்லை முழுவதையும் தமது ஆட்சிக்குள் கொண்டு வந்துவிடும் என்று அன்பார் மாகாண கௌன்சிலின் துணைத்தலைவர் பல்லேஹ் அல் இஸ்ஸாவி சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அன்பார் மாகாணம் முழுமையாக வீழ்வதை தவிர்க்க ஈராக் மத்திய அரசு மற்றும் அமெரிக்க தரைப்படையினர் உடன் தலையிட வேண்டும் என்று மாகாண தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். க்கு எதிராக தற்போது போராடும்; ஈராக் படையினர் மற்றும் பழங்குடியினர் அமெரிக்க இராணுவம் தலையிடாத பட்சத்தில் தமது ஆயுதங்களை களையப்போவதாக எச்சரித்துள்ளனர். இவர்கள் ஐ.எஸ். தாக்குதலுக்கு முன் நிலைகுலைந்திருப்பதாக இஸ்ஸாவி குறிப்பிட்டுள்ளார்.
 
போதிய ஆயுதம் மற்றும் பயிற்சி இல்லாத நிலையில் ஈராக் இராணுவம் ஐ.எஸ். போராளிகளை எதிர்கொள்ள தடுமாறி வருகின்றனர். இந்த புதிய மோதல் காரணமாக மாகாணத்தில் சுமார் 1,800 பழங்குடியினர் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ இருப்பாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தரைவழி அமெரிக்க படையினர் தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் ஈராக் அரசு உறுதியாக உள்ளது. அதேபோன்று தரைவழியாக படைகளை அனுப்புவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எந்த விருப்பமும் காட்டவில்லை.
 
எனினும் அன்பார் மாகாணத்தில் இருந்து படை உதவி கோரி எந்த வேண்டுகோளும் வரவில்லை என்று ஈராக் அரசு கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டிருந்தது. “எந்த கோரிக்கையாவது வந்திருந்தால் அது குறித்து நாம் பரிசீலித்து எமது பரிந்துரையை செய்வோம். ஆனால் இது வரை எமக்கு அவ்வாறான எந்த கோரிக்கையும் கிடைக்கவில்லை” என்று ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
 
அன்பார் மாகாணம் மூலோபாய ரீதியிலும் மிக முக்கியமான பகுதியாக கருதப்படுகிறது. இங்கு ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய அணையான ஹதீதா அணை உள்ளது. அத்துடன் அன்பார் மாகாணம் வீழ்ந்தால் ஐ.எஸ். போராளிகளுக்கு ஈராக் மற்றும் சிரியாவை இணைத்து பரந்த பகுதி கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும். இதன்மூலம் தலைநகர் பக்தாதிற்கு எதிராக தாக்குதல்களை ஆரம்பித்தால் அதற்கான விநியோகப்பாதையை அமைப்பதற்கு இலகு வானதாக இருக்கும்.
 
இதில் ஹதீதாக அணையை ஐ.எஸ். கைப்பற்றுவதை தடுக்க அமெரிக்கா தொடர்ந்து வான் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
 
எனினும் இந்த தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஐ.எஸ். போராளிகள் தொடர்ந்து முன்னேறுகின்றனர்.
 
அன்பார் மாகாணம் இன்னும் 10 தினங்களுக்குள் வீழ்ந்துவிடும் என்று அன்பார் மாகாண கௌன்சிலின் துணைத்தலைவர் இஸ்ஸாவி குறிப்பிட்டதாக டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளி யிட்டுள்ளது.
 
துருக்கி எல்லையில் இருக்கும் சிரிய குர்திஷ் நகரான கொபானியில் இடம்பெறும் மோதல் அன்பாரில் ஐ.எஸ். இன் முன்னேற்றத்தின் மீதான உலகின் பார்வையை திசை திருப்பி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அன்பார் பலவீனம் அடைந்திருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உறுதிசெய்துள்ளார்.
 
மறுபுறத்தில் சிரியாவின் எல்லை நகரான கொபானியிலும் ஐ.எஸ். போராளிகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். எனினும் இந்த போராளிகளுக்கு எதிராக குர்திஷ்கள் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கொபானி நகரை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முற்றுகையிட்டிருக்கும் ஐ.எஸ். குழு கடந்த சனிக்கிழமை நகரின் மத்திய பகுதியை நோக்கி முன்னேற முயன்ற போதும் அதனை குர்திஷ் போராளிகள் முறியடித்துள்ளனர்.
 
இதனால் குறித்த பகுதியில் சுமார் 90 நிமிடங்கள் வரை கடும் மோதல் வெடித்ததாக சிரியா தொடர்பில் கண்காணிக்கும் மனித உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது. நகரின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் தொடர்ந்து கடும் மோதல் இடம்பெற்று வருவதாக குர்திஷ் மக்களின் பாதுகாப்பு ஒன்றியம் நேற்று குறிப்பிட்டது.
 
இந்த நகரில் ஐ.எஸ்.க்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டணி கடந்த வெள்ளி, சனிக்கிழமைக ளில் மொத்தம் ஆறு வான் தாக்குதல்களை நடத்தியது. இதில் கட்டடங்கள், இரு சிறிய படைப்பிரிவுகள், இரு லொரி வண்டிகள் மற்றும் கட்டுப்பாட்டுத் தளமொன்றும் தாக்கப்பட்டதாக அமெரிக்க கட்டளை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
 
கொபானி நகர் மீது ஐ.எஸ். தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு 200,000க்கும் அதிகமானவர்கள் நகரைவிட்டு வெளியேறி அருகில் இருக்கும் துருக்கி எல்லையில் தஞ்சமடைந்துள்ளனர். நகரை சூழ இன்னும் சுமார் 12,000 சிவிலியன்கள் இருப்பதாகவும் இவர்கள் படுகொலை செய்யப்படும் அபாயம் உள்ளதாகவும் சிரியாவுக்காக ஐ.நா. விசேட பிரதிநிதி ஸ்டெபன் டி மிஸ்டுரா கடந்த வெள்ளிக்கிழமை எச்சரித்திருந்தார். அதில் நகரின் மையப்பகுதியில் இருக்கும் முதியவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சுமார் 700 பேரும் அடங்குகின்றனர். Tn

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *