‘ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலேயே நான் இன்னுமிருக்கின்றேன். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைவிட்டு விரட்டுவதற்கு முயற்சித்தாலும், என்னை இலகுவில் விரட்டிவிட முடியாது’ என்று, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாக அறையில் நிறுவப்பட்டுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்களை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர், நேற்று ஆஜரானார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுக்காக சுயாதீன தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரங்களுக்கான கட்டணம் செலுத்தாமை தொடர்பிலேயே அவர், இரண்டு மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
விசாரணை முடிந்து வெளியேறியபோது, அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கபோகின்றீர்களாமே என்று வினவினர்.
அக்கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.