Breaking
Thu. May 9th, 2024

நாட்டுக்குள் நிலைகொண்டிருந்த சுதந்திரம், படிப்படியாக வரையறுக்கப்பட்டு வருகின்றது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

திம்புலாகல தேரர் தொடர்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ‘நாடாளுமன்றத்துக்குள்ளும், சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில், பெயர் மற்றும் ஊர்கள் குறிப்பிடப்பட்டு, நேரடியாகவே அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டும் வருகின்றன. தனிப்பட்ட ரீதியிலும் அழைக்கப்பட்டு, பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன’ என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களையே, நல்லாட்சி அரசாங்கம் திறந்து வைத்து வருகின்றது என்றும் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.

‘அத்துடன், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், பொதுமக்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்க எந்தவொரு விடயமும் நிறைவேற்றப்படவில்லை’ என்றும் சுட்டிக்காட்டிய அவர், அந்த வாக்குறுதிகளைப் பட்டியல்படுத்தினார்.

‘கொடுப்பதாகக் கூறிய மோட்டார் சைக்கிள்கள் இல்லை. செலுத்துவதாகக் கூறிய 50 ஆயிரம் ரூபாயும் இல்லை. வைஃபையும் இப்போது ஹைஃபை ஆகிவிட்டது. குறைந்த விலையில் வழங்குவதாகக் கூறிய கார், இப்போது தான் வந்துகொண்டிருக்கிறதென்று வொக்ஸ்வெகன் காரில் சென்று தான், உலகம் முழுவதும் சொல்லி வருகிறார்கள்.

ஹம்பாந்தோட்டைக்குச் சென்று, எங்கள் நாட்டில் சிறந்த துறைமுகமொன்று இருக்கிறது. வந்து அங்கு முதலீடு செய்யுங்கள். கைத்தொழில் வலயங்களை ஆரம்பியுங்கள். அண்மித்ததாகவே, விமான நிலையமும் இருக்கிறது. அதிவேக நெடுஞ்சாலையும் உள்ளது. ரயிலும் வருகிறது’ என்று சொல்லிச் சொல்லியே, அவற்றை விற்பனை செய்ய முற்படுகிறார்கள். இவற்றை நிர்மாணித்ததற்காக அப்போது என்னை ஏசியவர்கள், இன்று அவற்றை விற்பனை செய்து வருகின்றார்கள்’ என மஹிந்த ராஜபக்ஷ, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். tm

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *