Breaking
Fri. May 17th, 2024
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்குவது தொடர்பில் மாதுலுவாவே சோபித தேரர் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக நிறைவேற்று முறைமையினை எதிர்க்கும் சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் கோட்டை நாக  விகாரையின் நகராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் களமிறங்கியுள்ளார். சோபித தேரர் அழைப்பு விடுத்தால் பேசத்தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தெரிவித்துள்ளன.
அடுத்த ஆண்டு முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் நோக்கத்தில் அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை மேலும் பலப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் கருத்துக்கள் அமைந்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் நிறைவேற்று அதிகார முறைமையினை நீக்கி பாராளுமன்ற பொறுப்புக்கூறல் அதிகாரத்தின் கீழ் ஆட்சியினை கொண்டு வர வேண்டும் எனும் நோக்கில் கோட்டை நாக விகாரையின் நகராதிபதியும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான மாதுலுவாவே சோபித தேரர் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி மக்கள் விடுதலை முன்னணி ஜனநாயகக் கட்சி ஆகியவையும் அமைப்புகளும் முயற்சித்து வருகின்றன.
கடந்த காலங்களில் இருந்தே அதிகாரப் பகிர்வினை நோக்கிய இவர்களின் செயற்பாடுகளில் தற்போது புதிய வகையிலான முயற்சிகள் கையாளப்பட்டு வருகின்றது. குறிப்பாக பிரதான எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை  எதிர்க்கும் ஆளும் தரப்பு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி புதிய வேலைத்திட்டமொன்றினை உருவாக்கவுள்ளதாக மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் எதிர்க்கட்சி சிங்கள தமிழ் முஸ்லிம் கட்சிகள் என வேறுபாடின்றி அதிகாரப் பகிர்வினை நேசிக்கும் ஜனநாயகத்தை விரும்பும் அனைவரையும் ஒன்று திரட்டி பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம் பொது உடன்படிக்கையினை ஏற்படுத்த முயற்சிப்பதெனவும் சோபித தேரர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேபோல் நிறைவேற்று முறைமையினை நீக்குவது தொடர்பில் அரசாங்க கூட்டுக்கட்சிகள் விருப்பம் தெரிவித்து வருகின்ற நிலையில் சோபித தேரர் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து அதற்கமைய பேச்சுவார்த்தைகள் நடத்த எமக்கும் அழைப்பு விடுக்கப்படுமாயின் நாம் பேச்சுவார்த்தைக்கு செல்வோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தெரிவித்துள்ளது. அத்தோடு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜே.வி.பி. சோசலிச கட்சிகள் அதிகாரப் பகிர்வினை ஆதரிப்பதாக முன்கூட்டியே தெரிவித்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக்கட்சி ஜனநாயகக் கட்சி ஆகியனவும் சோபித தேரரின் கருத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *