Breaking
Thu. May 16th, 2024

டிரன் குமார பங்ககம ஆரச்சி

நாம் புதிய நிலைமையை அறிந்து கொள்வதற்கு அளுத்கமைக்கு சென்றோம். அளுத்கமை – பேருவளை தீ எரிந்து, அணைந்து மூன்று மாதங்கள் கழிவதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜூன் நடுப்பகுதியில் எரிந்த இனவாத தீயின் இருண்ட நினைவு முழுமையாகவே அணைந்துள்ளதா? அதனை எதிர்கொண்ட மனிதர்கள் முன்னரைப்போன்று பழக்கப்பட்ட நிலையில் காலம் கழிக்கின்றனரா? அனைத்து நிலைவரங்களும் அளுத்கமைக்குள் பிரவேசித்து பார்க்க வேண்டியவைகளாகும்.

அளுத்கமை இன்னமும் இருண்டு காணப்படுகிறது. மூதேசிகளான, பயங்கரமான கடந்தகால பேய்கள் எல்லா இடங்களிலும். நகர மத்தியில் அமைந்திருந்த மல்லிகாவின் கட்டிடம் எரிந்து நிர்வாணமாகியிருப்பது மீண்டும் உயிர்பெறாத நிலையிலாகும். 2006ம் ஆண்டிலும் தீப்பற்றி எரிந்த இந்த கட்டிடம் இம்முறை அவ்வாறே இருந்தது. அது ஜூனை நினைத்து அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

தர்கா நகரிலிருந்து

தர்காநகர் இன்று ஊமை, செவிடு, குருடு. வழமையான காரியங்கள் நிறைவேறிய போதிலும் அனைத்து மனங்களும் நிலையற்றவை. தர்காநகரூடாக, அதிகாரிகொட, சீனாவத்தை, பதிராஜகொடை, நந்த விகாரையின் பின்புறமாக உள்ள வீதிகள் அனைத்திலும் நாம் பயணம் மேற்கொண்டோம். ஜூன் கறுப்பு ஜூனுக்கு எரிந்த, எரிந்து சாம்பலாகிய வீடுகள் புதிதாக உயிர் பெற்றிருந்தன. இது வேறொருவரது தவறை சுமந்தாலும் இராணுவ வீரர்களது கரத்தினாலாகும். எஸ்.ரீ.எப்பை நேரடியாக குற்றம் சுமத்தியவர்கள் இன்று இராணுவத்துக்கு நன்றி தெரிவிக்கின்றனர். இராணுவ அதிகாரிகள் நல்லவர்கள். அவர்கள் வீடுகளை நன்றாக நிர்மாணிக்கின்றார்கள். ஒரு சில விடயங்கள் சிறிது காலதாமதம். பிரச்சினையில்லை. வேலை நன்றாக நடைபெறுகிறது. அது முஸ்லிம் ஒருவரது கருத்து. இவ்வாறான கருத்துக் கொண்ட அநேகமானவர்கள் அங்கு வாழ்கின்றார்கள். குறுக்கு வழிகளை துருவிச் சென்று விசர் கொண்டு தீ வைத்த வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்றன. அந்த தீ அனைத்தையும் எரித்து சாம்பலாக்கியதனாலாகும்.

 மூன்று மாடிகளைக் கொண்ட வீடொன்று முழுமையாக நாசமாகியுள்ளது. அங்கிருந்த கதவு நிலைகளை திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளார்கள். அந்த வீட்டிலிருந்த கோடிக்கணக்கான பெறுமதியான பொருட்களை எடுத்து சென்றுள்ளார்கள். அனைத்தும் முடிந்த நிலையிலும் இன்னும் அங்கு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆயுதமேந்தியவாறு காவல் புரிகின்றனர்.

விகாரைகள் பலவற்றில் போதனை. போதனைக்குக் கீழ் விகாரை முழுவதும் ஆயுதமேந்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள். இது ஏன்? எனது முஸ்லிம் நண்பரொருவரிடம் நான் தொடுத்த கேள்வி இது.

சம்பவத்தின் பின் இவ்வாறுதான். விகாரைகளை பாதுகாக்கிறார்கள். நாம் விகாரைகளுக்கல்ல, எந்தவொரு சிங்கள வீட்டுக்கும் கூட கைவைக்கவில்லை. இங்கு நிர்மாணிக்கப்படும் வீடுகள் யாருடையவை என பாருங்கள். ஒரே ஒரு சிங்கள வீடு உடைக்கப்பட்டிருந்தது. அதை இன்று நன்றாக நிர்மாணித்துள்ளார்கள். அவர் எங்களை அழைத்துச் சென்று அந்த வீட்டைக் காட்டினார். அது தற்போது புதிய வீடொன்று. வீடுகள் கட்டப்படுகின்ற போதிலும் அது ஆமை வேகத்திலாகும். முஸ்லிமாயினும் அவருக்கு வசதி வாய்ப்புக்கள் இருந்தால் அவருக்கு முன்னுரிமை. அதன் காரணமாக அந்த வீடுகள் அவசர அவசரமாக நிர்மாணிக்கப்படுகின்றன. குறைந்த வசதிகளைக் கொண்ட குடும்பங்களது வீடுகள் நிர்மாணிக்கப்படுவது குறைந்த கவனிப்புடனாகும். அது எவ்வாறெனினும் இராணுவம் தொடர்பு பட்டிருப்பதால் முறையாக வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

அவர்களே தாக்கிவிட்டு அவர்களே கட்டுகின்றார்களல்லவா? நாம் அவ்வாறு கேட்டதற்கு யாரும் அவ்வாறு கூறவில்லை. அது மீண்டும் தீயை ஊதுவதற்கு இவர்கள் விரும்பாததனால் ஆக இருக்கலாம். என்றாலும் ஊதுபவர்களும் இருக்கிறார்கள். அப்படியாயின் எந்த கறுமத்துக்காக காவிமயம். காவியுடை தரித்த தேரர் மயம்.

மீண்டும் உசுப்பேற்ற முயற்சித்தல்

அன்று ஆகஸ்ட் 30ம் திகதி ஜூன் கலவரத்துக்கு இலக்காகி காலொன்றை இழந்த 18 வயதுடைய இளைஞரொருவர் உதைப்பந்தாட்ட போட்டியொன்றை கண்டு கழிப்பதற்கு போய் வரும் வழியில் சிங்களவர்கள் சிலர் அவர் மீதுள்ள கோபத்தினால் ‘ஹூ’ வைத்துள்ளனர். இந்த விடயம் நீண்டு செல்ல, அனைவரையும் அளுத்கமை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அனைவரும் சமாதானப்படுத்தப்பட்டு ஆரத்தழுவியவாறு பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்கள்.

எனினும் இதனை அறிந்த பத்திராஜகொட விகாரையின் தலைமைத் தேரர், மீண்டும் பொலிஸ் நிலையம் சென்று குறித்த முஸ்லிம் இளைஞரை அழைத்து வந்து தகர்க்க வேண்டுமெனவும் அவ்வாறின்றேல் தான் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறமாட்டேன் எனவும் கட்டளை பிறப்பித்தார். இறுதியாக பொலிசார் அனைத்தையும் சமாதானமாக தீர்த்துக் கொண்டு வெளியேறிச் சென்ற முஸ்லிம் இளைஞரை அழைத்து வந்து சிறைப்படுத்தியது தேரரை மகிழ்ச்சிக்குட்படுத்துவதற்காகும். முன்பு போன்று அன்றும் முஸ்லிம் மக்களது பொறுமை அத்துடன் முடிவுக்கு வந்து விடுகிறது. எனினும் அது எவ்வளவு காலத்துக்கு?

பெறுபேறு

எரிந்த வீடுகள், கடைகள் மீள நிர்மாணிக்கப்படுகின்றன. எனினும் அங்கிருந்த பொருட்கள், இடம்பெற்ற சேதங்கள் தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் இல்லை. வீடு நிர்மாணிக்கப்படும் வரை அவர்கள் வாடகைக்கே இருக்கிறார்கள். இவை எதுவும் அரசாங்கத்தோடு தொடர்புபட்டவைகள் அல்ல. இறந்த இருவரது குடும்பங்களுக்கும் நட்டஈடு. எவ்வாறெனினும் எந்தவொரு நீதி நியாயமும் கூட வழங்கப்படவில்லை. அந்தக் குடும்பங்கள் அநாதரவாகியுள்ளன. இருவரது கால்கள் வெட்டப்பட்ட நிலையில் உள்ளது. அவர்கள் 17, 18 வயதுடைய இரு இளைஞர்கள். அவர்களது வாழ்க்கை தொடர்ந்தும் இருளில். வீணான பிரச்சினையொன்றுக்கு இவர்கள் நிலையாகவே நட்டஈடு செலுத்தியுள்ளார்கள். இவர்கள் சிங்களவர்கள் பற்றி என்ன நினைப்பார்கள்? இந்த இரு கால்களும் இழக்கப்பட்டிருப்பது யுத்தமொன்றில் பங்கு கொண்டதனால் அல்ல. இது கறுப்பு ஜூலை ஏற்படுத்திய எச்ச சொச்சம். மற்றொரு இளைஞரது வயது 19. அவரது தொடையில் பாய்ந்த சன்னத்தின் காரணமாக அவரும் நிலையான நோயாளியாக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தாக்குதலுக்கு இலக்காகியுள்ள தாயொருவர் இன்றும் தமது முக மறைப்பை (பர்தா) சிறிது நேரத்திற்காகவேனும் அப்புறப்படுத்துவதாக இல்லை. அவரது விகாரமடைந்துள்ள முகத்துக்கு அஞ்சி, அவரது குழந்தை பால் அருந்துவதற்கு மறுத்து வருவது மாத்திரமன்றி, தாயையும் புறக்கணித்து வருகிறது. அந்தக் குழந்தையின் தலையும் கல்லடிக்கு இலக்காகி தையல் போடப்பட்ட நிலையில் உள்ளது. இவை அன்று ஏற்படுத்திய பெறுபேறுகளாகும். இது அவற்றின் ஒரு சிறு துளி மாத்திரமாகும். அவற்றை மீள வெளிப்படுத்திக் காட்டுவது இங்கு நோக்கமல்லவெனினும் ஜனாதிபதி கூறுகின்ற சிறு சம்பவத்தின் பெறுபேறை இரு கண்களாலும் கண்டு கொள்வதற்கு முடியுமாக உள்ளது. இதனால் அன்றைய நாடகத்தின் உண்மை நிலைவரத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. உண்மையிலே தீப்பற்றியது, எரிந்தது, சாம்பலாகியது இந்த உயிர்களாகும். இன்று இக்கிராமங்களில் சிங்கள, முஸ்லிம்களிடையே இருந்த அன்னியோன்யம் எரிந்து சாம்பலாகியுள்ளது. அதன் மீது தீ மூட்டியவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.

தங்களுக்கு நியாயம் கிட்டவில்லையென இன்னும் முஸ்லிம்கள் கூறுகின்றார்கள். நியாயம் எப்படியாயினும் இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமலிருப்பதற்கான வழிமுறைகள் கூட முறையாக இடம்பெறாதுள்ளதாகவே மக்கள் நம்புகின்றனர். இவ்வாறான சந்தேகம் இராணுவத்தினர் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதால் மாத்திரம் ஏற்படப் போவதில்லை. இதனை அளுத்கமைக்கு சென்றால் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

எனது கால் இல்லாத நிலையில் என்னைப்பற்றி நினைக்கவே முடியாது – அப்துல் ஹஸன்

அன்று எங்களது பள்ளிவாசலை தாக்கியவாறு எமது வீடுகளை உடைக்க வருவதாக கேள்விப்பட்டேன். நாங்கள் பாதைக்கு குறுக்காக இருந்து வருவதனை தடுக்க முற்பட்டோம். சிறியவர்கள், பெரியவர்கள் அனைவரும் சென்றோம். அப்போது இருளடைந்திருந்தது. திடீரென தெருவிளக்குகளுக்கு வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. முழு சூழலுமே இருளில் மூழ்கியது. அதனைத் தொடர்ந்து கடுமையான வெளிச்சமொன்று முகத்தின் மீது பாய்ச்சப்பட்டது. நான்கு பக்கத்திலிருந்தும் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுக் கொண்டிருந்ததை அவதானித்தேன். எனது காலில் ஏதோ பட்டதை உணர்ந்தேன்.

அவர் சாரத்திற்குள் மறைந்திருந்த கட்டையான காலை வெளியே எடுத்தார். 18 வயதுடைய அழகான இளைஞன் இது எனது வாழ்க்கை என்றவாறு ஊமையானான். அப்பிரதேசத்தின் சிறந்த உதைப்பந்தாட்ட வீரனான அவன், மிகவும் கவலையோடிருந்தது காலில்லாத நிலையில் உதைபந்து எதற்கு என கூறுவது போலிருந்தது.

40 நாட்கள் வைத்தியசாலையில் இருந்தேன். குணமாக்க முடியாதென காலை வெட்டி விட்டார்கள். இப்போது எனது வாழ்க்கை முடிந்து விட்டது. இனி எனக்கு கால் இன்றி என்னைப்பற்றி யோசிக்கவே முடியாதுள்ளது.

அவனது இரு கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. அவனது பேச்சை கேட்டுக் கொண்டிருந்த அவனது தாய் எம்மை விட்டும் மறைந்து விட்டாள். அது நாங்களும் சிங்களவர்கள் என்ற காரணத்தினாலாகலாகும். அந்த மனங்கள் அனைவர் தொடர்பிலும் கொண்டிருந்த நம்பிக்கை சிதைவடைந்ததன் காரணத்தினாலாகும். இது சிறு சம்பவமாவது யாருக்கு?

இவர் உதைபந்தாட்டப் போட்டியொன்றை கண்டு கழிப்பதற்கு கைத்தாங்கலோடு சென்றவேளை, சிங்களவர்களது ‘ஹூ’ சத்தத்துக்கு ஆளாகிறார். இதன் பிரதிபலன் அன்று பொலிசாரின் கெடுபிடிக்கு இலக்காகியதாகும். எனினும் முஸ்லிம் மக்கள் இதனை இதற்கப்பால் செல்லாது தடுத்துள்ளார்கள். அது மதிக்கப்படக்கூடியதொன்றல்லவா? குடும்பத்தின் மூத்தவனான இவன் தந்தையை இழந்தவன். இன்று அந்தக் குடும்பத்தின் மூத்தவரது காலும் இழக்கப்பட்டுள்ளது. இன்று யாருடைய வாழ்க்கை கேள்விகுரியனது.

அனைத்தையும் இழந்தேன் – மொஹமட் ரஜாப்டீன் தந்தை

இது காலையிழந்த மற்றொரு இளைஞன். அவர் சார்பாக அவரது தந்தை கருத்துக் கூறினார். பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த இந்த 17 வயது இளைஞன் அழ ஆரம்பித்தான். இவர் இன்று கட்டிலோடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளார். இது எனது இரண்டாமவர். இந்தச் சம்பவம் நிகழும்போது நான் தொழில் வாய்ப்பொன்றுக்காக தெற்காபிரிக்கா சென்றிருந்தேன். இது பற்றி அறிந்தவுடன் வந்துவிட்டேன். உடனடியாக வந்ததன் காரணமாக எனக்கு கிடைக்கவிருந்தவற்றை மாத்திரமல்ல தொழிலையும் இழந்துள்ளேன்.

இன்று நாங்கள் அநாதைகளாகியுள்ளோம். போதாக்குறைக்கு எனது மகனின் காலையும் துண்டித்துள்ளார்கள். இந்தப் பிள்ளைக்கு வயது 17. இறந்தவர்கள் இறந்து விட்டார்கள். அந்தக்கவலை ஓரிரு மாதங்கள், வருடங்கள் கழிந்ததும் குறைந்து விடும். ஆனால் இந்தப் பிள்ளையை காணும் போதெல்லாம் எம்மால் தாங்கிக் கொள்ள முடியாதுள்ளது. நாம் என்ன தவறு செய்தோம். ஏன் இவ்வாறு செய்தார்கள். அவரது கருத்துகள் வேகமாக வெளிவந்துகொண்டிருந்தன. சிறிய வீடொன்றில் வதியும் இவர்களில் ஆணொருவர் ஓரிடப்படுத்தப்படுவது சிறிய விடயமொன்றல்ல. ஏனெனில் இது அவரது வாழ்க்கையை ஆரம்பித்த மாத்திரமாகும். அவர் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இவ்வாறு காலம் கழிப்பது?

எங்களுக்குக் கவலை எனது பிள்ளை அன்று துப்பாக்கிச் சூடுபட்டு நாகொடை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது அட்டென்டன்மார் ஆ…. தம்பியா சிங்களவர்களை தாக்கினீர்களா என்று கேட்டவாறு ஒதுக்கி வைத்துள்ளார்கள். ஒரு நாள் முழுமையாக மருந்து வழங்காதிருந்துள்ளார்கள். அதன் காரணத்தினால் தான் கால் அழுகியது. 45 நாட்கள் வைத்தியசாலையிலிருந்து விட்டுத்தான் வந்துள்ளேன். இன்னும் கட்டிலிலிருந்து இறங்கி நடமாட முடியாது.

இந்த தந்தையின் நிலைமையை புரிந்து கொள்ள முடிகிறது. கட்டிலில் இருந்த இளைஞன் அழத் தொடங்கினான். இந்த உறுதியற்ற தன்மையால் பாதிக்கப்படுவது தனது வாழ்க்கையென்பதை அவன் நன்றாக அறிந்திருந்தான். இந்த 17, 18 வயதுடைய சிறுவர்கள் செய்த தவறென்ன? எனினும் அவர்கள் இதற்கு நட்டஈடு செலுத்தியுள்ளார்கள். கறுப்பு ஜூலை அதிகமானோருக்கு மறந்து விட்டாலும் இந்த உயிர்கள் வாழும்வரை இவர்களது குடும்பங்களுக்கு இதனை மறந்து விட முடியுமா?

நடமாட சிரமப்படுகிறேன் – மொஹமட் நசீம்

எனது தொடைக்கு துப்பாக்கிச் சூடுபட்டு சன்னம் தொடையினுள் சிக்கியுள்ளது. அதனை எடுக்க முடியாதென நாகொடை வைத்தியசாலையில் கூறினார்கள். ஆயினும் எமது சகோதரர்கள் பணம் சேகரித்து நவலோக்கவுக்கு அழைத்துச் சென்று குணப்படுத்தினர். எனது காலிலிருந்த ரவை அகற்றப்பட்டது. இன்னமும் நடப்பதற்கு கஷ்டமாக உள்ளது. எந்த நேரமும் மின்சாரம் தாக்குவது போல் உடம்பு புல்லரிக்கிறது.

இரண்டு மரணங்கள்- மொஹமட் ராசிக்

2014 ஜூன் 15ம் திகதி தர்காநகரிலுள்ள வலிப்பிட்டிய முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அண்மையில் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி கொல்லப்பட்ட மொஹமட் ராசிக் மொஹமட் சக்ராஸ் அல்லது மொஹமட் ராசிக் மொஹமட் ஜசிராஸ் எங்களது சகோதரர். 2014 ஜூன் 15ம் திகதி வலிப்பிட்டியவில் கலகக்காரர்களால் அவரது வர்த்தக நிலையம் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததும் அங்கு சென்றேன். அந்த வர்த்தக நிலையத்துக்கு அண்மையில்தான் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருந்தது. மண்டையோட்டை சிதைத்துக் கொண்டு ரவை உள்ளே சென்றிருந்தது. வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

அவருக்கு வயது 41. நான்கு, இரண்டரை வயதுகளையுடைய இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். தற்போது அந்தப் பிள்ளைகளுக்கு போக, வர இடமில்லாதுள்ளது. வீடு, கடைகளை நிர்மாணித்தாலும் அந்தப் பிள்ளைகளுக்கு தந்தை எங்கே? இந்தக் குடும்பத்தை பார்த்துக்கொள்வது யார்? எந்தவொரு நட்டஈடும் இந்த உயிர்களுக்கு இல்லை. இறுதியில் இது துப்பாக்கிச் சூட்டினாலல்ல, வெட்டப்பட்டதால் என்ற நிலைக்கு அரசாங்கம் வந்தது. சடலத்தை தோண்டியெடுக்குமாறு நாம் கூறினோம். ஏனென்றால் இறந்தவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டினால் தான் இறந்துள்ளாரென தற்போது ஏற்றுக் கொண்டிருக்கிறார்களாம். எமக்கு பிரேத பரிசோதனை சான்றிதழொன்று வழங்கப்பட்டது. ஏனையவற்றை பெறுவதற்கு நாம் இதுவரை செல்லவில்லை. அவற்றில் இக்காரணங்கள் எதுவும் இல்லை.

மொஹமட் சிராஸ்

இறந்தவர் எனது சகோதரர். மொஹமட் நஸார், மொஹமட் சிராஸ் என்பவர்கள். அவருக்கு இரண்டு பிள்ளைகள். அவர் துப்பாக்கிச் சூட்டினால் மரணித்துள்ளார். இவை எதனோடும் தொடர்புபட்ட நிலையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகவில்லை. விரட்டி விரட்டி துப்பாக்கியால் சுட்டார்கள். தற்போது இது தொடர்பாக எந்தப் பேச்சும் கிடையாது.

விகாரமடைதல்

நான் தர்காநகரிலுள்ள வலிப்பிட்டிய, சம்சுதீன் மாவத்தையிலுள்ள 88/42ம் இலக்க வீட்டில் வசித்து வருகிறேன். அன்று நான் வெலிப்பன்னையிலுள்ள மரண சடங்கொன்றுக்குச் சென்றேன். எனது வாகனத்தில் எனது மனைவி, பிள்ளை, பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெரும ஆகியோர் இருந்தனர்.

கற்கல், தடிகள், இரும்பு, பெற்றோல் போத்தல்கள், மணல் போத்தல்களோடு பெருந்தொகையானோர் பொலிஸ் ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் டொல்பின் ரக வாகனமொன்றை தாக்கினார்கள். பொலிசார் சுமார் 500 பேரளவில் அந்த இடத்தைச் சுற்றியிருந்தார்கள். இந்த வேலையை மேற்கொண்டவர்கள் சிங்களவர்கள். பொலிசார் அதனை தடுக்கவில்லை. அவ்வாறு தாக்கியவாறே எமது வாகனத்தை நோக்கி வந்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் எனது மனைவி பயத்தின் காரணமாக மயக்கமுற்றார்.

எனது வாகனத்தின் மீது தடிகளால் தாக்கிய அதேவேளை, மயக்கமுற்றிருந்த எனது மனைவியின் முகத்திலும் தடியினால் தாக்கினார்கள். அவரது வலப்பக்கமாக உள்ள கண் முழுமையாக சேதத்திற்குள்ளாகியது. களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றேன். பின்னர் நாம் நவலோக வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொண்டோம். பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சைகள் இரண்டை மேற்கொண்டோம். எனது சமூகம் எனக்கு இதற்காக உதவியது.

9 மாதங்களைக் கொண்ட எனது மகன் அப்துல்லாவின் தலையிலும் தடியால் தாக்கினார்கள். அதனால் நரம்பொன்று சேதத்துக்குள்ளாகியுள்ளதால் மண்டையோட்டில் 18 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல் காரணமாக எனது மனைவியின் முகம் எந்தளவுக்கு விகாரமடைந்துள்ளதெனின் எனது குழந்தை தாயிடமிருந்து பாலருந்துவதைக் கூட நிறுத்தியுள்ளது. எனது சிறிய மகன் தாயிடம் செல்வதற்கு அச்சப்படுகிறார். தாயை வெறுக்கிறார். இன்றுள்ளவர்கள் மனோரீதியாக கஷ்டப்படுகின்றார்கள். நாம் எவருக்கும் தவறு செய்யவில்லை. எங்களுக்கு இவ்வாறு செய்தது ஏன்?

முஸ்லிம் மக்கள்

இவ்வாறு இடம்பெற்ற அவர்களுக்கு உதவுவதற்கிருந்த ஒரே ஒரு வழிமுறை அவர்களது சமூகமாகும். இந்த ஒன்றிணைவையும் ஒற்றுமையையும் அல்லாவின் பெயரால் நடைமுறைப்படுத்திக் கொண்டு செல்வது சிறந்ததாகும். இன்று இராணுவம் இந்த வீடுகளை நிர்மாணித்து வழங்குகிறார்கள். அது அரசாங்க நிதியின் மூலமாகும். அது மாத்திரம்தான். எனினும் அவர்கள் இழந்த சொத்துக்கள், இருப்பதற்கான இடத்தையுமிழந்து கூலி வீடுகளை வாடகைக்குப் பெறுதல், காயப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்தல், சத்திரசிகிச்சை மேற்கொள்ளல் போன்ற அனைத்தையும் சுமக்க வேண்டியிருந்தது அளுத்கமை, தர்காநகர் முஸ்லிம்களாகும். முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள், புத்திஜீவிகள், வியாபாரிகள் உருவாக்கிக் கொண்டுள்ள இந்த ஐக்கியத்தினால் அனைத்தும் இல்லாவிடினும் அதில் அரைவாசியையாவது நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுவரை காயப்பட்டவர்களுக்கு சத்திரசிகிச்சைகளுக்காக இலட்சக்கணக்கில் இவர்கள் செலவு செய்துள்ளார்கள். தீப்பற்றிய சொத்துக்களை மீள உருவாக்கிக் கொள்ள உதவி செய்கிறார்கள். இவை அனைத்தையும் அவர்கள் முறையாக மேற்கொள்கின்றார்கள். அது இனமென்ற ரீதியில் மகிழ்ச்சியடைவதற்கும் இந்த வழிமுறை காரணமாக பொறுமையை தக்க வைத்துக் கொள்வதற்கும் முற்பட்டுள்ளார்கள். தனது மதம் கருதி அவர்கள் உழைக்கின்ற நூற்றுக்கு மூன்றுவீதமான பணம் ஏழைகளின் நலன்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும்.

அவர்கள் இவை அனைத்தையும் மேற்கொள்வது அவர்களுக்கிடையேயுள்ள ஐக்கிய மூலதனத்தினாலாகும். இதற்கு பொறாமைப்படுவதும் முஸ்லிம் வியாபாரிகள் மீது பொறாமைப்படுவதும் கொடுமையாகும். அவர்கள் முஸ்லிமாக இருந்தாலும் இறுதியாக இலங்கையர்கள். அந்த வகையில் இலங்கையராகவிருப்பது எமக்கு பெருமையாகும். அளுத்கமை அனர்த்தங்களுக்கு மத்தியில் உயிர் பிழைத்திருப்பது இவர்களது ஒத்துழைப்பினாலாகுமென்பதைக் கூற வேண்டும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *