Breaking
Sun. May 5th, 2024

-முஹம்மது நியாஸ்-

கடந்த வருடம் அதாவது 15.06.2014 அன்று இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அளுத்கம என்னும் நகரத்தில் பொதுபல சேனா என்னும் பௌத்த பயங்கரவாதிகளினால் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைச்சம்பவங்கள் சர்வதேசமே நன்கறிந்த ஒன்றாகும்.

இது மாத்திரமல்லாது இப்பயங்கரவாதிகளால் இஸ்லாமிய சமூகத்தின் மீது சுமார் நான்கு வருடங்களாக திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்ற அத்தனை வன்முறை சார் செயற்பாடுகளுக்கும் “இலங்கை நாட்டில் பௌத்த மதம் இஸ்லாமியர்களால் களங்கப்படுத்தப்பட்டு வருகிறது” என்ற பொதுபல சேனா அமைப்பின் பொய்யாகப்புனையப்பட்ட போலியான குற்றச்சாட்டே பிரதான காரணமாகும்.

இக்குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் கடந்த வருடம் அளுத்கம நகரிலுள்ள ஒரு முஸ்லிம் துணிக்கடை உரிமையாளர் பௌத்தமத சிறுவன் ஒருவனுடைய ஆணுறுப்பை கசக்கினார் என்று பகிரங்க மேடையில் காட்டுக்கூச்சல் போட்ட ஞானசார தேரர் அதன் மூலமாக சிங்கள மக்களுடைய உணர்வுகளை தூண்டிவிட்டு தன்னையொரு இனப்பற்றாளன் என்று வெளிக்கொணர எத்தனித்தார்.

ஒரு பௌத்தமத சிறுவன் மீது இஸ்லாமியர் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறினார் என்று போலியான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து தன்னையொரு புரட்சியாளனாக, பௌத்தம காவலனாக பறைசாற்ற முற்பட்ட ஞானசார அதற்கு விலையாகக் கொடுத்ததோ முஸ்லிம்களுடைய வரலாற்றில் என்றுமே ஈடுசெய்ய இயலாத பெறுமதியான பல உயிர்களும் உடமைகளுமாகும்.

இவ்வாறு ஒரு சிறுவனின் மீது பாலியல் ரீதியாக அத்துமீறினார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தே வரலாறு காணாத பல வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்ட ஞானசார இன்று அதேபௌத்த மதத்தைச் சேர்ந்த நான்கு வயதுடைய பெண் குழந்தையொன்று பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு காமக்கொடூரர்களால் கோரமான முறையில் குதறப்பட்டுள்ளது.

இன, மத, மொழி பேதமின்றி பெண்குழந்தைகளை பெற்றெடுத்த ஒவ்வொரு தாய் தந்தையர்களின் உணர்வுகளையும் கீறிக்கிழிக்கின்ற வகையில் இந்தக் கொடூரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அன்று ஒரு சிறுவனின் ஆணுறுப்பை கசக்கியதாகக் கூறி அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய்யான குற்றத்தை சுமத்தி பித்துப்பிடித்த மன நோயாளியைப் போன்று காட்டுக்கூச்சல் போட்டு தனது காடைத்தனத்தை கட்டவிழ்த்துவிட்ட ஞானசார இன்று நிதர்சனமாகவே இந்த பௌத்தமத சிறுமிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கெதிராக வாய் திறக்காமல் இருப்பதேன்?

அன்று அழுத்தகம நகரில் பகிரங்க மாநாடு அமைத்து பௌத்தமத சிறுவனுக்கெதிரான அநீதி(?)க்காக நீதி(?) கேட்ட ஞானசார இன்று இந்த நான்கு வயதுக்குழந்தையின் மீது பாலியல் வல்லுறவு புரிந்த காமக்கொடூரனுக்கு எதிராக பகிரங்க மாநாடு அமைக்க வக்கில்லாமல் புறமுதுகு காட்டி பின்வாங்குவது ஏன்?

அன்று ஒரு சிறுவனுடைய ஆணுறுப்பை கையால் தொட்டதாகக்கூறி அத்தனை கலவரங்களையும் அரங்கேற்றிய ஞானசார இன்று இந்த சிறுமியின் பாலியல், படுகொலைக்கெதிராக ஒரு ஆர்ப்பாட்டப் பேரணியையாவது ஏற்பாடு செய்யாமல் ஆப்பிழுத்த குரங்கைப்போன்று அமைதியாக இருப்பது எந்தவகையில் நியாயமானது?

தன்னுடைய பௌத்தமதம் பாழ்படுத்தப்பட்டு வருவதாகக் கூறி முதலைக்கண்ணீர் வடிக்கின்ற இந்த ஞானசார இன்று இன, மத பேதமின்றி அனைவரது உள்ளத்து உணர்வுகளையும் உசுப்பிவிட்டுள்ள, சீரழிக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள இந்தப் பச்சிளம் குழந்தைக்கு நீதி கேட்டு ஒரு துண்டுப்பிரசுரத்தையேனும் அச்சிட்டு வெளியிடுவாரா?

தன்னையொரு பௌத்தமத காவலனாக தனக்குத்தானே பட்டை தீட்டிக்கொள்கின்ற ஞானசார இன்று இந்த சிறுமிக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமை நாளை இன்னுமோர் இடத்தில் நடைபெறக்கூடாதென்பதற்காக தன்னுடைய சமூகத்தின் மீதான விழிப்புணர்வு கருதிய பிரச்சாரங்களில் ஈடுபடுவாரா?

இலங்கை நாட்டில் புத்த மதத்தவர்களுக்கு பாதுகாப்பில்லை, சுதந்திரமில்லை என்று சந்துபொந்துகளிலெல்லாம் நின்று கொண்டு கூச்சலிட்டு ஒப்பாரி வைத்துக் கூக்குரலிடுகின்ற ஞானசார இன்று ஒரு புத்தமத குழந்தையே பாலியல் ரீதியாக அத்துமீறப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதே இது தொடர்பில் இன்னும் இவர் வாய்திறக்காமல் இருப்பதன் மர்மம்தான் என்ன?

இவ்வாறு சமுதாயங்களில் நடக்கின்ற கொடுமைகளைக் கண்டும் காணாமலும் இருப்பது இனவாதத்தை மாத்திரம் முதலீடாகக் கொண்டு சமயத்தைப் போதிக்கும் ஞானசார போன்ற இனவாத சுயநலவாதிகளுக்கு வேண்டுமானால் சர்வசாதாரணமாக இருக்கலாம்.

ஆனால் இந்த வன்முறை பௌத்தமதத்தை சேர்ந்த ஒரு குழந்தைக்கு ஏற்பட்டிருந்தாலும் அந்த வடுவானது இன, மத, மொழி பேதமின்றி மனிதாபிமானமுள்ள ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்திலும் மிகவும் ஆழமாகவே பதிந்துள்ளது.

தன்னினத்திற்கான போராட்டம் என்று போர்க்கொடி தூக்கிக்கொண்டு தன்னுடைய சகோதர இனத்தை அடக்கியாள முற்படுகின்ற ஞானசார போன்ற காவியுடையணிந்த காடையர்கள் உண்மையில் தாங்கள் தங்களுடைய இனத்தின் மீது பற்றுக்கொண்டவர்கள்தான் என்றால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் நாட்டில் நடைபெறுகின்ற வன்முறைகளுக்கெதிராக குரல் எழுப்பவேண்டும். போர்க்கொடி ஏந்திப்போராட வேண்டும்.

தனது சமூகத்தில் இவ்வாறான கசப்பான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஆங்காங்கே விழிப்புணர்வு மாநாடுகளை ஏற்பாடு செய்யவேண்டும். குற்றவாளிகளை கைதுசெய்து சட்டத்தின் முன்னிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டங்களை, பேரணிகளை ஏற்பாடு செய்யவேண்டும்.

ஆனால் ஞானசார் போன்றவர்கள் அவற்றை செய்வதில்லை. மாறாக தன்னுடைய இனத்தின், மதத்தின் பெயரைப்பயன்படுத்தி சகோதர இனத்தின், சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடுவதே அவர்களுடைய இழிந்த நடைமுறையாகும்.

இவ்வாறான பௌத்த மதத்தின் புனிதப்பெயரால் அநியாயம் புரிகின்ற காவியுடை தரித்த காடையர்களை அவர்கள் சார்ந்த பொதுமக்களே துல்லியமாக விளங்கியுணர்ந்து அடையாளம் கண்டு கொண்டதன் விளைவுதான் கடந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை மக்களாலேயே சிறுபான்மையாக தோற்கடிக்கப்பட்டு அசிங்கப்பட்டுப்போனார்கள் என்பதை இனியும் இந்நாட்டில் மதங்களுக்கிடையிலான விரிசல்களை தோற்றுவிக்கின்ற, தோற்றுவிக்க முயல்கின்ற எவரும் மறந்துவிடக்கூடாது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *