Breaking
Fri. May 3rd, 2024

ஏ.எச்.எம்.பூமுதீன்

புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களின் இருள் சூழ்ந்த யுகம் இன்று 25வது ஆண்டு எனும் வெள்ளி விழாவை தொட்டு நிற்கின்றது.

1990ம் ஆண்டு ஐ.தே.க.வின் அரசாங்க காலத்தில் வெளியேற்றப்பட்ட இந்த வடமாகாண முஸ்லிம் மக்கள் இற்றை வரையான ஐ.தே.க.வின் மூன்றாவது தடவை ஆட்சிக் காலத்திலும் கூட அதே இருள் சூழ்ந்த துயரத்திற்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர்.

தனது ஆட்சிக் காலத்தில் வெளியேற்ப்பட்ட மக்களை அவர்களின் சொந்தக் காணியில் மீள்குடியேற்ற வேண்டிய தார்மீகக் கடமையை கொண்டிருந்த ஐதேக அரசு அதனை செயற்படுத்த இன்றுவரை மறுதலித்தே வருகின்றது. ஐதேக தான் அவ்வாறு என்றால் சுதந்திரக் கட்சி சார்பான ஜனாதிபதிகள் கூட அந்த மக்களின் மீள்குடியேற்றத்தில் அக்கறையோ கரிசனையோ காட்டவில்லை.

இதற்கெல்லாம் அடிப்படை காரணமாக அமைந்தது வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பிலான பொருத்தமான முறையிலான சர்வதேச மயப்படுத்தல் என்பது கிஞ்சித்தும் இல்லாமல் போனமையாகும்.

இந்தக் கட்டத்தில் தான் 2005ம் ஆண்டு காலப்பகுதியில் அதிகாரம் பொருந்திய அரசியல் தலைமைத்துவத்துடன் அமைச்சர் எனும் உயர் அதிகாரம் கெர்ணடு; ரிசாத் பதியுதீன் தோற்றம் பெற்றதன் பின்பேதான் முதலாவது சர்வதேச மயப்படுத்தல் என்பது ஆரம்பமானது.

2005 -2014 வரையிலான 09 வருட காலப்பகுதி வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பிலான சர்வதேச மயப்படுத்தலுக்கு கிடைத்த பெறுமதிமிக்க காலம் எனலாம். குறிப்பாக, அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அயராத உழைப்பினால் உலகில் உள்ள முஸ்லிம் நாடுகள் வடமாகாண முஸ்லிம்களை இக்கால கட்டத்தில் ஏறெடுத்துப் பார்க்க வழி சமைத்தன.

எனினும் அந்த சர்வதேச மயப்படுத்தல் என்பது வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்ற எதார்த்தத்தை அந்த நாடுகள் வெறுமன அறிந்து கொள்ள வழி சமைத்தனவேயே தவிர அந்த நாடுகளால் உருப்படியான எதையுமே செய்ய முடியவில்லை எனலாம்.

அவற்றுள் ஓரிரு முஸ்லிம் நாடுகள் வடமாகாண முஸ்லிம்களுக்கு என சில 100 வீடுகளை கட்டிக் கொடுத்ததை இந்த இடத்தில் ஞாபகப்படுத்துவது பொருத்தமாகும்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்ச் சமுகத்தினர் என்ற கோஷம் இற்றைவரை சர்வதேசம் பூராகவும் ஓங்கி ஒலிக்கக் காரணம் அச் சமுகத்தின் அரசியல் வாதிகளும் சர்வதேசம் பூராகவும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ச் சகோதரர்களும் என்றால் அது மிகையன்று.

ஆனால் உண்மையில் இந்த உள்நாட்டு யுத்ததில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதும் இற்றைவரை பாதிப்புக்களையும் துயரத்திலும்; அகப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் வடமாகாண முஸ்லிம்கள் தான் என்பதும் திட்டமிட்டு மறுதலிக்கப்பட்டு வரும் ஓர் உண்மையாகும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் இறுதியாண்டு ஆட்சிக் காலத்தில் விஸ்வரூபம் எடுத்த வில்பத்து காட்டினுள் வடக்கு முஸ்லிம்கள் அத்துமீறி குடியேறுகிறார்கள் என்ற கோஷம் இன்று மைத்திரி ஆட்சியிலும் மிக வேகமாக மேலோங்கி வருகின்றது.

சிங்கள பௌத்த இனவாத கும்பல்களும் அவர்களின் அடிவருடிகளும் இன்று இந்த வில்பத்து என்ற கோதாவில் களமிறங்கி வடமாகாண முஸ்லிம்களுக்கு துன்பத்திற்கு மேல் துன்பத்தை உருவாக்கிக் கொண்டே வருகின்றார்கள்.

அதற்கொரு படி மேலாக அந்த மக்களுக்காக தனியே துணிந்து நின்று குரல் கொடுத்து வரும் அமைச்சர் ரிசாத் பதியுதீனை ஒரு இனவாதியாக சித்தரித்து அவரைக் கைது செய்து சிறையில் அடைக்குமாறும் இன்றைய நல்லாட்சி எனக் கூறும் ஆட்சிக் காலத்தில் கோஷம் எழுப்பப்பட்டு வருகின்றது.

இன்று அல்லது நாளை அல்லது நாளை மறுதினம் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கைது செய்யப்படுவாரோ என்ற அச்சமும் பரபரப்பும் கொண்ட சூழல் இன்று நாடுபூராகவும் பரவி முஸ்லிம் சமுகத்தின் மத்தியிலும் மிதவாத போக்குடைய ஏனைய சமுகத்தினர் மத்தியிலும் பெரும் கவலையையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வடமாகாண முஸ்லிம்கள் மீள்குடியேறச் சென்ற போது அம்மக்களின் சொந்தக் காணிகளில்; மாவீரர் குடும்பங்கள் குடியேற்றப்படடிருப்பதை கண்டு வெறும் கவலைiயை மட்டும் வெளிப்படுத்தியவர்;களாக அம்மக்களுடன் எவ்வித முரண்பாடுகளையும் தோற்றுவிக்காது. தமக்கு வேறு காணிகளை தாருங்கள் என கேட்டு கௌரவமாக நடந்து கொண்ட அந்த வடமாகாண முஸ்லிம்களா வில்பத்துக்குள் அத்துமீறி காணி பறிக்கப் போகிறார்கள் என்ற நியாயமான ,மன வேதனைக்குரிய கேள்வி இன்று அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்தக் கட்டத்தில்தான் வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தற்போது இருந்து கொண்டிருக்கின்றது.

விடுதலைப்புலிகளால் அன்று அழிக்கப்பட்ட வடமாகாண முஸ்லிம்களின் 20 ஆயிரம் வீடுகளையும் 76 பெரிய பள்ளிவாசல்களையும் 60 பாடசாலைகளையும் தனித்து நின்று கட்டி முடிக்க வேண்டிய பாரிய பொறுப்பை தனது தோளில் சுமந்தவராகத் தான் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இவ்வளவு பாரிய இனவாத அநீதிகளுக்கு மறுபக்கம் முகம்கொடுத்தவராக உள்ளார்.

தமிழ்ச் சகோதரர்கள் தமது பிரச்சினையை உரிய முறையில் சர்வதேச மயப்படுத்தியமையை அடுத்தே சர்வதேசத்தின் பாரிய அழுத்தத்தின் காரணமாக அம்மக்களின் பல ஏக்கர் காணிகள் இந்த மைத்திரி அரசின் 100 நாள் திட்;டத்தின் கீழ் விடுவிக்கப்பட்டது என்ற உண்மையை இந்த இடத்தில் சுட்டிக்காட்டியேதான் தீரவேண்டும்.

அவ்வாறானதொரு சர்வதேச மயப்படுத்தல், அதன் மூலமான சர்வதேசத்தின் அழுத்தமும் இந்த வடமாகாண முஸ்லிம்களின் விடயத்திலும் பிரயோகிக்கப்படாத விடத்து வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் இன்றைய வெள்ளிவிழாவுடன் நிறைவுபெறாது பொன்விழாவையும் தாண்டிச்செல்லும் என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.

இந்த வகையில்தான் சர்வதேசம் பூராக வாழும் இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்கள் தமது சகோதரர்களின் உரிமைக்காக பொங்கி எழவேண்டிய தேவையும் அவசியமும் உணரப்பட்டு வருகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்கள் தாம் வாழும் நாடுகளில் மற்றும் பிரதேசங்களில் வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பிலான அம்மக்களுக்கான உரிய தீர்வு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆதங்கம் இலங்கையில் வசிக்கும் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கருத்தரங்குகள், கூட்டங்கள், துண்டுப்பிரசுரங்கள் மற்றும் ஜனநாயக வழிமுறையிலான ஆர்ப்பாட்டங்கள் மூலம் இவ்வாறான விழிப்புணர்வை அந்தந்த நாடுகளில் ஏற்படுத்தி வடமாகாண முஸ்லிம்களின் நியாயமானதும் கௌரவமானதுமான மீள்குடியேற்றத்திற்கு அழுத்தத்தை பிரயோகிக்க முன்வர வேண்டும் .

அன்று ஐரோப்பிய நாடுகளில் முன்னெடுத்த ஹலால் ,ஹபாயா , அழுத்கமைச் சம்பவம் மற்றும் மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதி போன்றவற்றிக்கு எதிராக நீங்கள் அன்று எடுத்த விழிப்புணர்வு எந்தளவு தூரம் இலங்கை அரசுக்கும் மியன்மார் அரசுக்கும் சர்வசேத்தின் அழுத்தம் பிரயோகிக்கப்படடதோ அதே போன்ற ஒரு சூழ்நிலையை வடமாகாண முஸ்லிம்கள் விடயத்திலும் நீங்கள் ஏற்படுத்த துணைநிற்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரினதும் கோரிக்கையும் வேண்டுகோளுமாகும்.

இறுதியாக இந்தப் புனிதமிக்க ரமழான் மாதத்தில் அதிக நன்மையில் ஈடுபடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களும் தங்களது பிரார்த்தனைகளில் வடமாகாண முஸ்லிம்களையும் இணைத்துக் கொள்வதோடு அம்மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் அம்மக்களின் வீடமைப்பு நிர்மானத்திற்கும் இன்னோரன்ன அபிவிருத்திப் பணிகளுக்கும் சர்வதேசத்தின் உதவிகள் கிடைக்கச் செய்ய நீங்கள் உங்களிடம் இருக்கின்ற தனிப்பட்ட செல்வாக்கை பிரயோகிக்க வேண்டும் என்றும் வேண்டப்படுகின்றது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *