Breaking
Mon. May 13th, 2024

முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர் சகோதர முஸ்லிம் கட்சியொன்றின் தலைவரை மேடைகளில் தூஷித்தும் நடித்துக் காட்டியும் நையாண்டி பண்ணியும் கேவலப்படுத்தியமையுமே, தான் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டமைக்கு பிரதான காரணமென்று முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர் இல்ஹாம் மரைக்கார் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

காழ்ப்புணர்வுடன் இஸ்லாமிய சகோதரர் ஒருவரை வேண்டுமென்றே மு.கா தலைமை தூற்றியதனாலேயே அக்கட்சியிலிருந்து அவசரமாக தான் வெளியேறிதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் ‘நளினமான புத்தளத்துப் பேச்சு’ என் மனதை உறுத்தியது. மர்ஹூம் அஷ்ரப்பின் சமூகப் பற்றையும் அவரது மேடைப் பேச்சுக்களையும் அவரது செயல்பாடுகளையும் பாடசாலைக் காலத்தில் இருந்தே கண்டதனால் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து அரசியல் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை எனக்குத் தூண்டியது.

அக்கட்சியில் பல ஆண்டுகளாக அங்கம் வகிக்கும் நான், 2013 ஆம் ஆண்டு வடமேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டும் 2014 இல் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டும் கணிசமான வாக்குகளை முஸ்லிம் காங்கிரசிற்குப் பெற்றுக் கொடுத்திருக்கின்றேன். அக்கட்சியின் வளர்ச்சிக்காக நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். எனினும் வடமேல் மாகாணசபைத் தேர்தலில் சதி முயற்சியினால் நான் தோற்கடிக்கப்பட்டேன்.

ஆண்டுக்கொருமுறை புத்தளத்திற்கு வந்து எமது வாக்குகளை அள்ளிச்செல்லும் மு கா தலைமை இற்றைவரை புத்தளத்தின் அபிவிருத்திக்காகவும் எமது மக்களின் நலனுக்காகவும் எந்தவொரு உருப்படியான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லையென்பதை நான் மன வேதனையுடன் கூறுகின்றேன்.

தேர்தலுக்குத் தேர்தல் இங்கு வந்து வாய் வீச்சுக்களால் அரசியல் நடத்துவதன் மூலம் எமது மக்களுக்கு எந்தப் பயனும் கிட்டாது.

அதுமட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸ் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதில் உருப்படியான எந்த முயற்சிகளையும் இதுவரை மேற்கொள்ளவுமில்லை. அவ்வாறான எத்தகைய திட்டங்களும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

அமைச்சர் ரிஷாட் எனது பாடசாலை நண்பர். படிக்கும் காலத்திலே அவரது இஸ்லாமியப் பண்புகளைக் கண்டு நான் மனதார மகிழ்ந்திருக்கின்றேன். துடிப்புள்ள இளைஞரான அவர் அரசியலில் ஈடுபட்டு எம் பியாகி,  அமைச்சராகி பின்னர் கட்சியமைத்து அரிய பல சேவைகளை செய்துவருகின்றார்.

முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகள் ஏற்படும்போதெல்லாம் துணிவுடன் போராடி வெற்றி பெறுகின்றார். தனக்கும் தான் சார்ந்த வட புல சமூகத்திற்கும் அடைக்கலம் தந்த புத்தளம் மண்ணை அவர் நேசிப்பது மட்டுமன்றி தமது கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியலையும் எமக்குத் தந்துள்ளார்.

புத்தளத்தில் கடந்தகாலத்தில் அவரால் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தற்போதும் பாரிய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இவைகளை எவராலும் மறுத்துரைக்க முடியாது. அத்துடன் அவர் முஸ்லிம் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார். மக்கள் காங்கிரஸில் கல்விப்பிரிவொன்றை ஆரம்பித்து அதன் மூலம் முஸ்லிம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிவரும் பணிகள் ஏராளம்.

எனவே சமூகத்தின் மீது அக்கறை கொண்டு உழைத்து வரும் அமைச்சர் ரிஷாட்டின் கரங்களை நான் பலப்படுத்தத் தீர்மானித்தேன். மக்கள் காங்கிரஸின் மூலம் பணி செய்ய விரும்புகின்றேன். இது மட்டுமன்றி மிக விரைவில் எனது வழியைப் பின்பற்றி புத்தளத்திலிருந்து மக்கள் காங்கிரஸில் பலர் இணைந்து கொள்ளவுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.

 

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *