இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இலங்கை வருகின்றார். இலங்கையின் மிக நெருங்கிய அயல் நாடான இந்தியாவின் பிரதமர் ஒருவர் 28 வருடங்களுக்கு பின்னர் உத்தியோகபூர்வ அரச விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வருகின்றமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதப்படுகின்றது.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது பல்வேறு முக்கியமான விடயங்கள் இடம்பெறவுள்ளதுடன் பல உடன்படிக்கைகளும் இரண்டு நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்படவுள்ளன.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க,எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
சந்திரிகாவுடன் சந்திப்பு
அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் கொழும்பில் இந்திய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார். இதன்போது பல விடயங்கள் குறித்து பேச்சு நடத்தப்படும். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பாரா இல்லையா என்பது குறித்து இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை்.
வௌ்ளிக்கிழமை தினத்தில் இறுதி நிகழ்வாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரவு விருந்துபசாரம் நடைபெறும். அதில் பிரதமர் மோடி கலந்துகொள்வார். அத்துடன் முதல்நாள் நிகழ்வுகள் முடிவடையும்.

