அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி ஒன்றிணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டுவருவதிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் திருத்தம் மேற்கொள்வதிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பங்குதாரராக முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும் என்ற நோக்கமும் இதனூடாக நிறைவேறியுள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று பதவிப் பிரமாணம் செய்தனர்.
இவர்களில் அமைச்சரவை அந்தஸ்துள்ள 11 அமைச்சர்களும், 5 இராஜாங்க அமைச்சர்களும், 10 பிரதி அமைச்சர்களும் அங்கம் வகிக்கின்றனர்

