Breaking
Mon. Dec 15th, 2025

க.கிஷாந்தன்
பஸ்ஸில் விட்டுச்சென்ற பணப்பையை, நேர்மையாக நடந்துகொண்ட அந்த பஸ் சாரதியின் உதவியுடன் மாணவியொருவர் மீளப்பெற்றுக்கொண்ட சம்பவமொன்று அட்டன் நோர்வூட் பகுதியில் 18.03.2015 அன்று புதன்கிழமை இடம்பெற்றது.

பொகவந்தலாவை – கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.சதாநந்தனி என்ற பாடசாலை மாணவி ஒருவர், மஸ்கெலியாவில் உள்ள தனியார் வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது 7,200 ரூபாய் பணம், அடையாள அட்டை ஆகியன அடங்கிய பணப்பையை பஸ்ஸிலேயே மறந்து விட்டு சென்றுள்ளார்.

பணப்பையை பஸ்ஸில் வைத்துவிட்டு இறங்கியதை உணர்ந்த அம்மாணவி, உடனடியாக நோர்வூட் பொலிஸில் அது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

மாணவியின் தகவல்களை கருத்திற்கொண்டு பஸ்ஸை அடையாளம் கண்டுகொண்ட பொலிஸார், மேற்படி பஸ்ஸின் சாரதிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

பொலிஸார் அழைப்பை மேற்கொண்ட போது அட்டன் நகரை பஸ் அடைந்திருந்த போதிலும், உடனடியாக அந்த பஸ்ஸை திருப்பிக்கொண்டு நோர்வூட் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற கே.பி.சாந்த புஷ்ப குமார என்ற சாரதி, மேற்படி மாணவியின் பணப்பையை நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க விஜயசிங்கவிடம் ஒப்படைத்தார்.

பணப்பையை தேடிக்கொடுத்த பொலிஸாருக்கும் ஒப்படைத்த சாரதிக்கும் நன்றி தெரிவித்து பணப்பையை பெற்றுக்கொண்டு சந்தோஷத்துடன் வீடு திரும்பினார் மாணவி எஸ்.சதாநந்தனி.

Related Post