Breaking
Wed. Dec 10th, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என்று, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கிய இலங்கைக் கடற்படைச் சிப்பாயான விஜித ரோஹண விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் குறித்து, இந்தியன் “எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நான் விரும்புகிறேன். அவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

அவர் ஒரு நல்ல மனிதர். ஆனால், அவர் எமது நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது. அவர் எமது பிராந்திய ஒரு மைப்பாட்டை மதிக்க வேண்டும்.

ராஜீவ்காந்திபோன்று அவரும் தலையீடு செய்ய முனைந்தால், தமிழர் பிரச்சினை மீளவும் கிளம்பும்.

ஆயிரக்கணக்கான இலங்கைப் படையினரும், 1500 இந்தியப் படையினரும், போரில் மரணமாகியுள்ளனர். மோடி இலங்கை அரசுடன் உறவுகளை வைத்துக்கொள்ள வேண்டும்.

அமைதியைப் பேண வேண்டும். போர் முடிவுக்குவந்த பின்னர், இங்கு அமைதி நிலவுகிறது. தமிழர்கள் மீன்பிடிக்கிறார்கள், விவசாயம் செய்கிறார்கள். பொருளாதாரமும், சுற்றுலாத்துறையும் நன்றாக இருக்கிறது.

அவர்களுக்கு ஆதரவு வழங்கக் கூடாது என்று, தலையீடு செய்யக் கூடாது என்று நீங்கள் அவருக்கு கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம், இலங்கைக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தில், கொழும்பில் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையின்போது, கடற்படைச் சிப்பாயான விஜித ரோஹண விஜேமுனி துப்பாக்கியினால் தலையின் பின்புறமாகத் தாக்கியிருந்தார். எனினும், ராஜீவ்காந்தி சற்று நகர்ந்து கொண்டதால் பெரும் பாதிப்பில் இருந்து தப்பிக்கொண்டார்.

இதையடுத்து, கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட விஜித ரோஹண விஜேமுனி, பின்னர் விடுவிக்கப்பட்டு, தற்போது நுகேகொடவில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post