Breaking
Mon. Dec 8th, 2025

இளைஞர்கள் விளையாட்டுடன் தொடர்புடையவர்களாக தங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் போதையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கலாம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஒட்டமாவடி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கழகங்களுக்கு உதைபந்தாட்டம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை ஒட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் கழக தலைவர் எஸ்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
இன்று எமது இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து காணப்படுவதுடன், குறிப்பாக போதை மாத்திரைகள் மற்றும் கேரளா கஞ்சாக்கள் பாவனை அதிகரித்த மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுவது கவலைக்குரிய விடயம். இதற்கு முக்கிய காரணம் இன்றைய இளைஞர்கள் விளையாட்டுடன் தொடர்பின்மையே ஆகும்.

அந்த வகையில் விளையாட்டுக் கழகத்தினர் விழிப்பாக இருக்க வேண்டும். கடந்த காலம் போன்றல்ல இப்போதைய காலம். கடந்த காலத்தில் நஞ்சற்ற உணவுகளை உண்டு தேக ஆரோக்கியமாக வாழ்ந்தோம். ஆனால் தற்போது நஞ்சுள்ள உணவுகளை உண்டு சிறுவயதிலே பல நோய்களை சுமந்தவர்களாக எமது சமூகத்தில் பலர் வாழ்கின்ற துப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
நஞ்சூட்டப்பட்ட பொருட்களை உண்டு போதையோடு சங்கமிக்கின்ற சமூகமாக மாறும் போது அந்த சமூகம் சீர்குழைந்து போய்விடும். இதனால் எதிர்காலத்தில் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையும் சீர்குழைந்து விடும் இதனால் போதையற்ற மாவட்டமாகவும், விளையாட்டுடன் கல்வியையும் சேர்ந்த மாவட்டமாகவும், எமது மட்டக்களப்பு மாவட்டம் மாறுவதற்கு அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் உழைக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மத்திய வலய பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.அஷ்ரப், ஒட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எம்.எச்.எம்.ஹலீம் இஷ்ஹாக், ஒட்டமாவடி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் இனாமுல்லாஹ் மற்றும் சம்மேளன பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

Related Post