சீகிரியாவில் கண்ணாடிச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவித்துவரும் உதயசிறி (27) என்னும் யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
உதயசிறியை விடுதலை செய்ய வேண்டுமென்ற பிரதி வெளிவிவகார அமைச்சரின் எழுத்துமூல கோரிக்கை ஏற்கனவே ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் அவர் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் உரையாடவுள்ளார்.
அறியாமை காரணமாக உதயசிறி செய்த தவறு அவரது குடும்பத்தாரை பாதித்துள்ளமை மற்றும் ஏழ்மை நிலை ஆகியவற்றை கருத்திற் கொண்டே பிரதி வெளிவிவகார அமைச்சர் அவரை விடுதலை செய்வதற்கான முயற் சிகளில் களமிறங்க தீர்மானித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு சித்தாண்டி விநாயகர் புரத்தினைச் சேர்ந்த சின்னதம்பி உதயசிறிய (27) என்னும் யுவதி தனது நண்பர்களுடன் பெப்ரவரி 14 ஆம் திகதியன்று சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். இதன்போது சீகிரிய மலையிலிருந்து கீழே இறங்குவதற்காக வரிசையில் காத்திருந்த உதயசிறி ஏதேச் சையாக தனது தலையில் குத்தப்பட்டிருந்த ஊசியைக் கழற்சி தனது பெயரின் முதற் பாதியான ‘உதயா’ என எழுதியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொலிஸார் அவரை கைது செய்து தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது தொல்பொருட்களைச் சேதப் படுத்தினாரென்ற குற்றச்சாட்டில் இவருக் கெதிராக இரண்டு வருட சிறைத்தண் டனை வழங்கப்பட்டது.
தந்தையை இழந்த உதயசிறி மட்டக் களப்பு மாணிக்க கற்கள் பட்டை தீட்டும் பயிற்சிக் கல்லூரியில் மூன்று வருடங் களாக பயிற்சி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

