கிழக்கில் முஸ்லிம் சமூகம் ஓரங்கட்டப்படுவது ஏன்? டாக்டர். ஹில்மி மஹ்ரூப்!

-ஊடகப்பிரிவு-

எம்.சி.எம்.ஆர் புட்போல் பியெஸ்டா (MCMR Football Fiesta 2018) மேற்படி உதைபந்தாட்ட தொடருக்கான விருது வழங்கும் வைபவம், கிண்ணியா நகரசபை நூலக கேட்போர் கூடத்தில்  எம்.சி.எம்.ரிஸ்வி தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும்,  கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் கூறியதாவது,

எமது மண்ணிலே விளையாட்டுத்துறை மாத்திரமல்ல, ஏனைய துறைகளான கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய எல்லாத் துறைகளிலும், இந்த நிகழ்வு போன்று முன்னுதாரணமாக காட்டக்கூடிய துறைகளாக ஒவ்வொரு துறையும் மாற்றப்பட வேண்டும்.
அதே போன்று, எமது இன விகிதாசாரத்துக்கு ஏற்ற உரிமைகள் எல்லா துறைகளிலும் மத்திய அரசிலும், மாகாண அரசிலும் கிடைக்க வேண்டும். இலங்கையில் 10% வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்துக்கு மத்திய அரசின் சகல சேவைகளிலும், அபிவிருத்திகளிலும், வேலைவாய்ப்புகளிலும் 10% முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

2012 புள்ளிவிபரவியல் அறிக்கையின் படி, திருமலையில் 43% முஸ்லிம்களும், 30% தமிழர்களும், 27% சிங்களவர்களும் வாழ்ந்து வருகின்றனர். 2018இன் மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யப்படுமானால், அண்ணளவாக முஸ்லிம் சமூகம் 45% ஆக காணப்படும், முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட திருகோணமலையில், மத்திய அரசின் மூலமாகவும், மாகாண அரசின் மூலமாகவும் முஸ்லிம் சமூகத்துக்கு சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், நிர்வாகம் போன்ற பல துறைகளிலும் தொடர்ச்சியாக அநியாயம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

தகுதியான பலர் எமது சமூகத்தில் இருந்தும், இலங்கையின் எப்பாகத்திலும் ஒரு அரசாங்க அதிபர் நியமிக்கப்படவில்லை. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்களான திருகோணமலை, அம்பாறை போன்ற மாவட்டங்களிலும் கூட முஸ்லிம் அரசாங்க அதிபரை (GA) நியமிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமையே காணப்படுகின்றது என்றார்.