தாயையும், பிள்ளையையும் மந்த போசனையிலிருந்து பாதுகாப்பதே ஒரு அரசாங்கத்தின் கடமை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு போஸாக்கு பொதி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எனும் வகையில் நாம் தாய்மாரையும், பிள்ளைகளையும் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கிலேயே கர்ப்பிணி தாய்மார்களுக்கு உணவு பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என தெரிவித்த ஜனாதிபதி, போசனை பொதியின் ஊடாக ஒரு தாய்க்கு சுமார் 20 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
நீண்ட யுத்தத்தின் காரணமாக வடக்கிலுள்ள தாய்மார்களும், பிள்ளைகளும் மந்தபோசனை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மலையகத்திலும் இவ்வாறு மந்த போசனை நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலுள்ளவர்களை மீட்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான வசதிகளை பெற்று கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்படுகின்ற செயற்திட்டங்களை மக்களுக்கு பயன்படும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதுடன், அந்தந்த திட்டங்களை உரிய தரத்துடன் மக்களிடம் ஒப்படைக்க வேண்டியதும் அரச ஊழியர்களின் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்.

