Breaking
Sat. Dec 13th, 2025

சமீபத்தில் அமெரிக்காவும் நேட்டோ அமைப்பைச் சேர்ந்த பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய எல்லையில்  தொடர் இராணுவப் பயிற்சியை ஆரம்பித்ததை அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தனது வடக்கு கடற்படை எப்போதும் தயார் நிலையில் இருக்குமாறும் ஆர்டிக் வலயத்தில் பயிற்சியில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இப்பயிற்சியானது வழக்கமான பயிற்சியே என்றும் இதற்கும் சர்வதேசத்தின் சூழ்நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ரஷ்யத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஸ்புட்னிக் ஊடகம் வெளியிட்ட செய்தியில், ரஷ்யக் கப்பற் படை இன்று திங்கட்கிழமை காலை 8 மணிக்கு உத்தரவினைப் பெற்றதாகவும், இந்த உத்தரவில் சுமார் 38 000 துருப்புக்கள், 41 கப்பல்கள், 15 நீர்மூழ்கிகள், 110 விமானங்கள் அடங்கலாக தரை, கடல் மற்றும் வான் மார்க்கமான இராணுவப் பயிற்சியை ஆரம்பிக்குமாறு கட்டளை தரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வரை இப்பயிற்சி நீடிக்கும் என ஸ்புட்னிக் அறிவித்துள்ள நிலையில்  ஆர்டிக் வலயத்தில் ரஷ்யாவின் பூரண பாதுகாப்பை உறுதிப் படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை ரஷ்ய எல்லையில் நேட்டோ ஆரம்பித்துள்ள இராணுவப் பயிற்சியில் இணைந்து செயற்படும் நோர்வே  கடந்த சில தசாப்தங்களில் இல்லாதளவு மிக அதிகளவாக 5000 துருப்புக்களை ஈடுபடுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் ஆப்பரேஷன் அட்லாண்டிக் ரிசோல்வ் இன் ஓர் பாகமாக  ஆயுதம் தாங்கிய ஸ்ட்ரைக்கர் வாகனங்களது பேரணி ரஷ்யாவுக்கு அண்மையிலுள்ள எஸ்தோனியா, லித்துவானியா, போலந்து, லத்வியா மற்றும் செக் குடியரசு ஆகிய  5 ஐரோப்பிய தேசங்களினூடாக சுமர் 1100 மைல் கடந்து ஜேர்மனியின் வில்செக் இனை அடையவுள்ளன. மேலும் நேட்டோவின் இராணுவப் பயிற்சியில் கருங்கடலில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் திட்டமும் அடங்குவதுடன் பல்கேரியா, ரோமானியா, துருக்கி ஆகியவற்றின் கடற்படைக்கு நேட்டோவின் யுத்த விமானங்கள் பயிற்சி அளிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Post