ஜனாதிபதித் தேர்தலில் மாற்றமொன்றை எதிர்பார்த்து வாக்களித்த நாட்டு மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளை அர்ப்பணிப்போடு நிறைவேற்றுவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இலண்டனில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பொன்றிலும் கலந்து கொண்டிருந்தார். அங்கு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, “வறுமையை ஒழித்து சுபீட்சம் மிகு நாட்டைக் கட்டியெழுப்புவோம். இனங்களுக்கிடையிலான அவநம்பிக்கை களையப்படும். பயம், சந்தேகத்தை இல்லாதொழித்து அமைதியான யுகத்தை உருவாக்க தற்போதைய அரசாங்கம் தம்மை அர்ப்பணித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை எவ்வகையிலும் சிதைக்கப் போதில்லை. மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.” என்றுள்ளார்.

