மரண தண்டனை நிறைவேற்ற 8 பணியிடங்கள்: சஊதி விளம்பரம்

சஊதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றும் வேலைக்கு எட்டு பேரை நியமிக்க இணையத்தில் விளம்பரம் வெளியிட்டிருக்கிறது.

சஊதி அரசின் சிவில் சேவைகள் அமைச்சின் இணைய தளத்தில் வெளிவந்திருக்கும் விளம்பரத்தில், இந்த வேலையைச் செய்ய சஊதி அரேபியப் பிரஜைகள் மட்டுமே தகுதியானவர்கள் என்றும், பட்டப்படிப்பு தேவையில்லை என்றும் இந்த வேலையைப் பெறுவதற்கு எந்த வித தேர்வு வழிமுறை ஊடாகவும் போகவேண்டியதில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.

சஊதி அரேபியாவில் மரண தண்டனையை நிறைவேற்றுபவர்கள், கொலை, பாலியல் வல்லுறவு மற்றும் போதைப் பொருட்களை விநியோகம் செய்தவர்கள் போன்ற குற்றங்களைச் செய்தவர்களின் தலையை வெட்டுவது மற்றும் திருட்டுக் குற்றம் செய்தவர்களின் அவயங்களை வெட்டுவது போன்ற வேலைகளை செய்யவேண்டும்.

இது போன்ற தண்டனைகள் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளுக்குப் பின், அவர்களால் வாளைக் கொண்டு செய்யப்படுகின்றன.