மஹிந்தவின் திட்டத்தை முறியடித்த இராணுவத் தளபதி!- ராஜித சேனாரத்ன

கொழும்பில் இன்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியெ ரத்தன தேர்ர் ஆகியோருடன் இணைந்து, நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

கொழும்பில், இராணுவத்தினரை நிறுத்த வழங்கப்பட்ட உத்தரவை ஏற்க, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க மறுத்து விட்டார்.

அவசரகாலச்சட்டத்தின் மூலம், அதிகாரத்தை தக்க வைக்கும் திட்டத்தை முன்னைய அரசாங்கம் கொண்டிருந்தது.

கடைசி நேரத்தில், உயர்மட்டத்தில், இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ஏற்க மறுத்ததன் மூலம், அரசாங்க அதிகாரிகள் அந்த திட்டத்தை தோற்கடித்து விட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அதுரலிய ரத்ன தேரர், இராணுவத்தின் உதவியுடன் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க ராஜபக்ச குடும்பம் முயற்சித்தது என்று கூறியிருக்கிறார்.

மேலும் மகிந்த ராஜபக்ச தோல்வியை ஏற்றுக் கொண்ட போதும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவினால் இதை தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்து போனவராக இருந்ததாகவும் ஜாதிக ஹெல உறுமயவினர் கூறுகின்றனர்.

கோத்தபாய ராஜபக்சதான், ஆட்சியில் மகிந்த ராஜபக்ச தொடர்ந்து நீடிப்பதற்கு பல வழிகளையும் கையாண்டதாகவும் கூறுகின்றனர்.

இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தின் மூலம் ஆட்சியில் நீடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அட்டர்னி ஜெனரல் இதை ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல்தான் தேர்தல் ஆணையாளரின் அலுவலகத்துக்கே கோத்தபாய சென்று தேர்தல் முடிவுகளை நிறுத்த முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ராஜபக்ச, குடும்பத்தினரின் நெருக்கடிகளுக்கு எவரும் உடன்படாத காரணத்தால் வேறு வழியின்றி அமைதியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, தேர்தலுக்குப் பின்னர், வடக்கில் இராணுவ முகாம்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், வடக்கில் எங்கும் புலிக்கொடிகள் பறக்கின்றதாகவும், இராணுவ முகாம்களின் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், யாழ். பல்கலைக்கழகத்தில் வன்முறைகளும் இடம்பெற்றதாகவும் வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.