தேசிய அரசாங்கத்தை விமர்சித்து மக்களை திசை திருப்ப சில அரசியல் அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். அரசியல் சுயநலத்தில் நாட்டைக் காவு கொடுக்க நாம் தயாரில்லை என தெரிவிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் தலைவராக்க மக்கள் விரும்பவில்லை. முடிந்தால் மஹிந்த ராஜபக் ஷ பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுக் காட்டட்டும் எனவும் சவால் விடுத்தார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது
கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் நடந்தவை அனைத்தையும் மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். யார் குற்றவாளி என்பதை புதிதாக நாம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இன்று நாட்டில் மக்கள் அமைதியாக இருக்கின்றனர்.
அதனை இரண்டு விதமாக அரசியல்வாதிகள் பிரிக்கின்றனர். ஒரு சிலர் அரசியலில் தம்மை நிலை நாட்டிக் கொள்ள மக்களின் அமைதியினை பயன்படுத்தி கொள்கின்றனர். தேசிய அரசில் தம்மை முக்கியமான பங்குதாரராக விமர்சித்துக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இன்றும் சிலர் அரசியல் அநாதைகளாகியுள்ளனர். ஊழல் சூழ்ச்சியில் ஆட்சியினை நடத்தி இன்று ஓரங்கட்டப்பட்டிருக்கும் சிலர் மக்களின் அமைதியினை மக்களின் தோல்வியாக சித்திரித்து அதில் மீண்டும் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என முயற்சிக்கின்றனர்.
ஆனால் ஜாதிக ஹெல உறுமய இவ் இரண்டு விடயங்களையும் கண்டிக்கின்றது. மக்களின் அமைதி அவர்களின் தெளிவினையே வெளிப்படுத்துகின்றது. மக்கள் கடந்த காலங்களில் கூச்சலிட்டனர். ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள், கோசங்கள் என நாடு அமைதியாக இருக்கவில்லை. ஆனால் இன்று நாடு அமைதியாக இருக்கின்றது. மக்கள் பொறுமையாகவும் தெளிவாகவும் உள்ளனர். ஆனால் மக்களின் மெளனம் முன்பை விட மிகவும் ஆபத்தானவை. அடுத்த கட்ட மக்களின் முடிவு மிக மோசமானதாக அமையும் என்பதை ஒவ்வொரு அரசியல் தலைமையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதே போல் ஒரு சில நம்பிக்கையாளர்களை தூண்டி விட்டு அவர்கள் மூலம் மக்களை தமது கூட்டணியில் ஒன்று திரட்டலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார். ஆனால் மக்கள் மஹிந்த ராஜபக் ஷவின் தலைமைத்துவத்தை விரும்பவில்லை. அவர்கள் விரும்பாத காரணத்தினால் தான் ஆட்சி மாற்றத்தினை விரும்பினர். இப்போதும் யார் வேண் டுமானாலும் அரசியலுக்கு வர முடியும். ஆனால் மஹிந்த ராஜபக் ஷ இன்னொரு முறை பொதுத் தேர்த லில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. அப்படி முடியுமானால் இம்முறை தேர்தலில் அவர் வென்று காட்டட்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

