மெகா சீரியல் (Poem)

கிழவியும் குமரியும்
கிறுக்குத் தனமாய்
பல பல நாடகம்
பார்த்து ரசிக்கிறார்.

சேரியில் வாழும்
சின்ன வீட்டிலும்
சீரியல் பார்க்க
LCD உண்டு.

நாடகம் சொல்லும்
நாறிய கருத்தால்
கோடு ஏறிய
குடும்பங்கள் எத்தனை?

அடுத்தவன் மனைவிக்கு
ஆட்டையை போடல்

உடுத்த உடுப்புடன்
ஓடிப் போதல்

கொடுத்து உதவி
குழியைத் தோண்டல்

மருமகள் வாழ்வை
மாமியார் கெடுத்தல்

அருமையாய் பேசி
ஆம்பிளையை கவிழ்த்தல்

உரிமையைப் பேசி
உம்மாவைப் பிரித்தல்

தரித்திர நாடகத்
தாக்கங்கள் ஆயிரம்

இரண்டு வரிகளில்
இருக்கின்ற கதையை
இறப்பராய் இழுத்து
இருபது எபிசோட்டில்
கறப்பார் நேரத்தை
கன்றாவி காட்சி.

அடி மேல் அடிவைத்து
அம்மணி ஒருவர்

படியால் இறங்கி
பணிய வருவதை

ஒவ்வொரு படியாய்
ஓடும் கமரா

இவ்விரு படிகளுக்கு
இடையில விளம்பரம்

காலைத் தொடரில்
கணவனாய் வந்தவன்

மாலைத் தொடரில்
மாமனார் ஆவதை

பார்த்து ரசிக்கும்
பாமரத் தனத்தை

வார்த்தையில் சொல்ல
வசனங்கள் இல்லை.

(காத்தான்குடி நிஷவ்ஸ்)