Breaking
Fri. Dec 5th, 2025

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் வெளியிடப்பட்ட உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான  வர்த்தமானியை நடைமுறைப்படுத்த எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை தடைவிதிக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று காலை (22) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக ஆக்குமாறு கூறி ஆறு வாக்களர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதேவேளை, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தலைமையில், நேற்று (21) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உள்ளுராட்சித் தேர்தலை பிற்போடுவதற்காக மறைமுகமாக சதி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக, தேர்தல் கண்காணிப்புக்களில் ஈடுபடும் அமைப்புக்களின் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த இரண்டரை வருடங்களாக தேர்தல்களைப் பிற்போடும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் நாட்டிலுள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களின் உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

பொதுமக்களின் நலனை விடவும், அரசியல்வாதிகள் தமது நலனை முன்னிறுத்தி செயற்படுகின்றமையினாலேயே, இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது  தெரிவிக்கப்பட்டது.

Related Post