முகம்மட் பஹாத்
“வடக்கில் முஸ்லிம்களுக்கான வீட்டுத் திட்ட வினியோகத்துக்கான விசேட செயற்திட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும்” என கோரும் மகஜர் ஒன்றினை NFGGயின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குக் கையளித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை மன்னாருக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். இதன்போதே மேற்படி மகஜரினை அஸ்மின் அய்யூப் கையளித்துள்ளார்.
அம்மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைக்கான தங்களது விஜயத்தை இலங்கை மக்கள் சார்பாக நாமும் மிகுந்த முக்கியத்துவத்துடன் நோக்குகின்றோம். இலங்கை இந்திய உறவு மாத்திரமன்றி இலங்கை மக்களின் அபிவிருத்தியிலும் தங்களது விஜயம் பங்களிப்பு செய்யும் என்பது எமது நம்பிக்கையாகும்.
வடக்கு மக்கள் யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள். இதில் வடக்கு முஸ்லிம்களும் உள்ளடங்குகின்றார்கள். மீள்குடியேற்ற நிகழ்ச்சித் திட்டங்களில் வடக்கு முஸ்லிம்கள் போதுமான அளவில் உள்ளீர்ப்பு செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் எம்மிடையே நிலவி வருகின்றது. இந்நிலையில் குறிப்பாக வடக்கில் அமுல்படுத்தப்படுகின்ற இந்திய வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம்கள் போதுமான அளவு உள்ளீர்க்கப்படவில்லை. இதனை உறுதிபடுத்தும் வகையில் வடக்கில் மீள்குடியேறுகின்ற முஸ்லிம்களுக்கான விஷேட நிகழ்ச்சி திட்டம் ஒன்று ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பதில் வடக்கு மாகாண சபை கொள்கையளவில் உடன்பட்டிருக்கின்றது.
குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் மிகச் சொற்ப அளவிலான முஸ்லிம்களே இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்ளீர்க்கப்பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2000 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வீட்டுத் தேவையுடையவர்களாக இருந்தும் இந்திய வீட்டடுத் திட்டத்தில் பின்பற்றப்படுகின்ற கடுமையான சட்ட நடைமுறைகளின் காரணமாக 317 குடும்பங்கள் மாத்திரமே இந்திய வீட்டுத் திட்டத்துக்காக விண்ணப்பிக்க முடியுமாகவிருந்தது. அவர்களுள் 33 குடும்பங்களுக்கு மாத்திரமே வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்திய உயரதிகாரிகளை இதற்கு முன்னர் சந்தித்த சந்தர்ப்பங்களிலும் யாழ் மாவட்ட முஸ்லிம்களுக்கு 300 வீடுகளை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் 33 வீடுகளையே அனுமதித்துள்ளார்.
இவ்விடயத்தில் தங்களுடைய தலைமையிலான இந்திய அரசு நேரடியாக தொடர்புபட்டு வடக்கில் முஸ்லிம்களுக்கான வீட்டுத் திட்ட வினியோகத்துக்கான விசேட செயற்திட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.”

