ரயில் கூரையில் ஏறி விபரீத செல்பி: 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கி பலியான மாணவன்

செல்பி என்ற சுயபுகைப்படம் எப்போது பிரபலமாகத் தொடங்கியதோ, அப்போதிருந்தே செல்பி மோகத்தால் விசித்திரமான இடங்களில் விபரீதமாக செல்பி எடுக்க முயற்சித்து, பலர் தங்கள் உயிரை விடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

மும்பையில் உள்ள புனித சேவியர் உயர் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருபவர் சகில்(14). கஞ்ஜூர்மர்க் பகுதியைச் சேர்ந்த இவர் நேற்று முன்தினம், தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவதற்காக நாகூர் ரெயில் நிலையத்திற்கு சென்றிருந்தார். திடீரென விசித்திரமாக எதையோ யோசித்த சகில், ஸ்டேஷனில் நின்றிருந்த ரெயிலின் கூரை மீது ஏறினார்.

கையில் இருந்த செல்போனால் தன்னை வளைத்து வளைத்து செல்பி எடுத்துக்கொண்ட அவர் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக பதட்டத்தில் உயரத்தில் இருந்த 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும் உயரழுத்த மின்கம்பியைத் தொட்டவுடன் தூக்கி வீசப்பட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை விட்டு ஓடிவிட்டனர். சுய நினைவிழப்பதற்கு முன்பாக, சம்பவத்தைப் பார்த்து விரைந்து வந்த போலீசாரிடம் சகில் தன் தாயின் செல்போன் எண்ணை கொடுத்தார். உடனடியாக அருகிலுள்ள ராஜவாடி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

மதியம் 2.30 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடலில் 80 சதவீதத்திற்கும் மேல் தீக்காயங்கள் இருந்ததால் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், மும்பை ஜோகேஷ்வரி ரெயில் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் 16 வயதான கணேஷ் என்ற மாணவரும் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.