கிழக்கு யுக்ரேனிலுள்ள பிரிவினைவாத கிளர்ச்சியாளரக்ளுக்கு ஆயுத விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு முன்னாள் இலங்கைத் தூதுவர் ஆயுதம் விநியோகித்துள்ளதாக யுக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோவின் அரசாங்கம் இலங்கை வெளியுறவு அமைச்சிடம் முறைப்பாடு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
அரசியல் நியமனமாக ரஷ்யாவுக்கான தூதுவராக பணியாற்றியிருந்த உதயங்க வீரதுங்க, அண்மையில் புதிய அரசாங்கத்தால் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்ததாக இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் அஜித் பி. பெரேரா பிபிசிக்கு வழங்கிய செவ்வியின் போது குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அவர் நாட்டுக்கு திரும்பியதாகத் தெரியவில்லை என்றும் வெளியுறவு அமைச்சினால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அஜித் பெரேரா கூறினார்.
உதயங்க வீரதுங்க, இலங்கைக்கு வந்ததாகவும் தகவல் இல்லை. உலகில் எங்கிருக்கிறார் என்றும் கூறமுடியவில்லை. அவரைக் காணவில்லை’ என அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர் என்று உதயங்க வீரதுங்க-வை விபரித்த துணை வெளியுறவு அமைச்சர், அவர் தொடர்பிலான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகக் கூறினார்.

