பக்கீர் எம் இஸ்ஹாக் B.A
கமியூனிசம் தோற்றுப்போனது. முதலாளித்துவம் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது. இஸ்லாம் ஒன்றே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமூகத்தில் இருந்து குறைக்க முடியும். அதனால்தான் இஸ்லாம் சக்காத் என்னும் திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. ஆனால் இது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுதான் இங்கு கவலை தரும் விடயம்.
வாழ்க்கையை ஒரு மரதன் ஓட்டத்திற்கு ஒப்பிட முடியும். இங்கு விரும்பியவர்களல்லாம் அப்போட்டியில் கலந்து தன்னால் இயன்றளவு ஓடலாம். ஆனால் இங்கு 3 பேருக்கு 1ம் 2ம் 3ம் பரிசுகளும் ஒரு 10 பேரை தெரிவு செய்து ஆறுதல் பரிசுகளும்; கொடுக்கப்படும். எஞ்சியவர்கள் ஓடியவரை இலாபம் என நினைத்து வீடு திரும்பிவிடுவர். இதுதான் இன்றய நம் சமூகத்தின் நிலை. ஒரு சமூகத்தில் 100 பேர் இருப்பதாக எடுத்துக்கொண்டால் அந்த 100 பேரும் பொருளாதார வெற்றியை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என நினைத்து வியர்க்க விருவிருக்க ஓடுகின்றனர் அதில் 10 பேர் வெற்றியடைகின்றனர் 90 பேரும் தோல்வியை சந்திக்கின்றனர். சமூகத்தில் வெற்றிபெறுபவர்கள் குறைவாகவும் தோல்வியடைபவர்கள் அதிகமாகவும் காணப்படுகின்றனர்.
இவ்வாறான ஒரு நிலைமையில் சமூகத்தின் தேவையுடையவர்களை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த சமூகத்தின் நன்மை கருதி ஒரு வட்டி இல்லா வங்கி ஒன்றை அமைக்க வேண்டிய தேவைப்பாடு இன்று உள்ளது. இதன் மூலம் சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள தேவையுடையவர்கள் மட்டுமல்லாமல் அனைவரினதும் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்பளிப்புச்செய்ய முடியும்; அத்துடன் வட்டி என்னும் பாவத்தில் இருந்தும் விலகி இருக்க முடியும்.
இன்று நம் முஸ்லிம் சமூகத்தில் போதுமான அளவிற்கு அரசியல் கட்சிகளும் மக்கள் அதிகாரம் பெற்ற அரசில் தலைமைகளும் காணப்படுகின்றன. இஸ்லாத்தை எடுத்தியம்புவதற்கு தப்லீக் ஜமாத்தினர், தௌஹீத் ஜமாத்தினர் மற்றும் ஜமாஅத் இ இஸ்லாமி போன்ற பலமிக்க இஸ்லாமி பிரச்சார இயக்கங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக இலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் அகில இலங்கை ஜம்யத்துல் உலமா சபை காணப்படுகின்றது. அதுமட்டுமா தேசிய சூறா சபையும் காணப்படுகின்றது.
இவ்வாறான பலம் பெற்ற அரசியல் தலைமைகள் இஸ்லாமிய இயக்கங்கள் காணப்பட்டும் இதுகாலவரை மக்களை வட்டியில் இருந்து விலக்குவதற்கும் மக்களின் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவதற்குமான காத்திரமான திட்டங்களை வகுத்து ஒவ்வொரு ஊரிலும் வட்டி இல்லா கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வகையில் இஸ்லாமிய வங்கிச் செயன்முறை ஒன்றை நடைமுறைப்படுத்தி அதில் வெற்றி காண்பதற்கு முன்வராமல் இருப்பது ஒரு பெரும் கேள்விக்குறியாகவே உளளது.
வட்டி வாங்குவதும் கொடுப்பதும் அதற்கு துணை நிற்பதும் இஸ்லாத்தில் பெரும் குற்றமாகும். இஸ்லாம் வட்டியை ஹறாமாக்கி வர்த்தகத்தை ஹலாலாக்கி உள்ளது. இதல்லாம் இருந்தும் இன்று அரச மற்றும் தனியார் வங்கிகளின் வட்டியில் சிக்கி தம் பொருளாதாரத்தை இழப்பது மட்டுமல்லாமல் ஒரு கடன்காரணாக நடமாடும் பெரும்பாலான முஸ்லிம்களை நாம் பார்க்கின்றோம். இது யாரின் குற்றம் ? வட்டி ஹறாம் என்று இஸ்லாம் கூறுகின்றது என்றால் இஸ்லாமியர்களாகிய நாம் தேவையுடையவர்களை கருத்திற் கொண்டு காத்திரமான திட்டங்களை உருவாக்குதல் வேண்டும். நாளை மறுமையில் நாம் ஒவ்வொருவரும்; பதில் கூற கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கும் 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் இன்று அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளின் கடனில் மாட்டிக்கொண்டு அதிலிருந்தும் மீள முடியாதவர்களாக விளக்கின் ஒழியில் வந்து விழும் விட்டில் பூச்சிகளாக இருக்கின்றனர். ஒருவருக்கு ஒரு வீட்டை கட்டிக்கொள்ள வேண்டும் 5 இலட்சம் பணம் தேவைப்படுகின்றது உடனே ஒரு வங்கியில் கடன் எடுத்து மாதாமாதாம் வட்டியும் முதலுமாக செலுத்துகிறார். ஒருவருக்கு அவசரமாக பனம் தேவைப்படுகின்றது தன்னிடம் இருக்கும் நகையை வங்கியில் ஈடு வைத்து பணம் பெறுகின்றார்.; இவ்வாறே தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக வட்டி வங்கிகளை நாடிச்செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை இந்த இஸ்லாமி சமூகத்தில் காணப்படுகின்றது.
இவ்வாறான தேவைகளை நிறைவு செய்வதற்கு நம் இஸ்லாமிய சமூகத்தில எந்தவிதமான அமைப்புக்களும் இல்லாமல் இருப்பதை நினைத்து நாம் வெட்கித்து தலைகுணிய வேண்டும்.
• யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ அவர்கள் (மறுமையில்) சைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழ மாட்டார்கள்;;. இதற்குக் காரணம் அவர்கள் நிச்சயமாக வியாபாரம் வட்டியை போன்றதே என்று கூறியதனாலேயாம்.
அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி வட்டியை ஹறாமாக்கி இருக்கின்றான். ஆயினும் யார் தன் இறைவனிடம் இருந்து நற்போதனை வந்தபின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடத்தில் இருக்கின்றது. ஆனால் யார் (நற்போதனை பெற்றபின்னர் இப்பாவத்தின்பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்.
அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.(2:275)
இவ்வாறான ஒரு வட்டி இல்லா வங்கி முறைமை ஒன்றினை அமைப்பதன் ஊடாக அதன் நன்மைகளை நம் சமூகம் தலைமுறை தலைமுறையாக அனுபவிற்க முடியும். அது மாத்திரமல்லாமல் ஏனைய சகோதர சமூகத்தனரையும் இதன் பால் ஈர்க்க முடியும்.
வட்டி ஹறாம் என்று பிரச்சாரம் செய்வது மட்டும்தான் நம் கடமை என்று நினைத்துக்கொண்டிருக்கின்றன இந்த பிரச்சார இயக்கங்கள். அபிவிருத்தி என்றால் வீதியை திருத்துவதும் கட்டிடங்கள் திறந்துவைப்பதும்தான் அபிவிருத்தி என அரசியல்வாதிகள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
செவ்வாய் கிரகத்திற்கு 100 பேரை கொண்டு சென்று அங்கு குடியமர்த்த நாசா திட்டமிடுகின்றது. நாம் வாழும் இந்த மண்ணில் ஒரு வட்டி இல்லா வங்கி அமைக்க நம்மால் முடியவில்லை. காரணம் நாம் சடவாதத்தில சிக்குண்டு சுயநலச்சக்கரத்தில் சழன்றுகொண்டிருக்கின்றோம்.
வட்டியில்லா வங்கிச்செயற்பாடுகள் மூலமாக மக்களின் பொருளாதாரத்தை ஒரு உறுதியான நிலையில் வைத்தருக்க முடியும் என்பதோடு அவர்களின் வாழ்க்கைத்தரத்தினையும் உயர்த்த முடியும். காலப்போக்கில் மக்களின் நிதி சம்மந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான ஒரு மையமாக இதனால் தொழிற்பட முடியும்.; சாதாரண வங்கிகளுக்கும் வட்டி இல்லா வங்கிச் செயன்முறைக்கும் இடையிலான நன்மை தீமைகள் மக்கள் மத்தியில் விபரமாக எடுத்துக்கூறப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுதல் வேண்டும்.
இன்று பல்வேறு முஸ்லிம் நாடுகளில் இவ்வாறான வட்டி இல்லா வங்கிமுறையினூடாக அந்த நாடுகளின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் விருத்தியடைந்து செல்வதை காணலாம்.
தனியார் முயற்சி இந்த மண்ணில் எங்கும் வியாபித்து காணப்படுகின்றது. அதற்காக தனியார் முயற்சி கூடாது என்று அர்த்தமல்ல. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதுபோல, அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதுபோல எல்லேரும் ஒன்றுபட்டும் நம் பொருளாதார முன்னேற்றத்திற்காக முயற்சிக்க வேண்டும். அரசியலில் நாம் ஒன்றுபடுவதைப்போன்று பொருளாதாரத்திலும் நாம் ஒன்றினைந்து செயற்படுதல் வேண்டும். அவ்வாறான ஒன்றினைவு வட்டி இல்லா வங்கிமுறை ஒன்றை அமைப்பதினூடாக சாத்தியப்படமுடியும்.
நம் முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் பிரதிநதிகளுக்கும் அனைத்து இஸ்லாமிய பிரச்சார இயக்கங்ளுக்கும் அகில இலங்கை ஜம்யத்துல் உலமா சபைக்கும் மற்றும் தேசிய சூறா சபைக்கும் ஒரு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். ஒவ்வொரு முஸ்லிம் சமூகத்திலும் வட்டி இல்லா வங்கி முறைமை ஒன்றை ஏற்படுத்தி மக்களை வட்டியில் இருந்தும் பாதுகாத்து அவர்கள் மத்தியில் பொருளாதார விருத்தியை ஏற்படுத்தி சமூக ஏற்றத்தாழ்வுகளை குறைக்க முன்வாருங்கள் என்பதே அதுவாகும்.

