மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை ரக்ன லங்கா ஆயுத களஞ்சியசாலை விவகாரங்கள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த விவகாரங்கள் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவிடம் முழுமையான வாக்குமூலம் ஒன்று பெறப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பிலான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் அவரை கைது செய்வதா இல்லையா என்பதையோ அல்லது வேறு வழிகளில் நடவடிக்கை எடுப்பதா என்பதை சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக தீர்மானிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோன் மேலும் குறிப்பிட்டதாவது,
மிதக்கும் ஆயுதகளஞ்சியசாலை ரக்ன லங்கா தனியார் பாதுகாப்பு நிறுவன ஆயுத களஞ்சியசாலை தொடர்பான விசாரணைகளை விசேட புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று முன்னெடுத்துள்ளது.
இந்த விசாரணைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன. மிக விரைவில் இந்த விசாரணைகள் பூர்த்தியாகும்.
ஆயுத களஞ்சியசாலைகளுக்கு பாதுகாப்பு அமைச்சு வழங்கிய அனுமதியின் நியாயாதிக்க மற்றும் சட்டபூர்வ தன்மை குறித்து எமது விசாரணைகளில் முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த அனுமதியில் பொலிஸாருக்கு உடன்பாடு இல்லாமையும் சந்தேகத்துக்கு இடமான நடைமுறைகளுமே நாம் விசாரணைகளை தொடர காரணமாகும்.
இது தொடர்பில் நாம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவிடம் முழுமையான வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்துள்ளோம்.
இந்த விவகாரம் தொடர்பில் நாம் சட்டமா அதிபருக்கு முழுமையான அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்து அவரின் ஆலோசனைக்கு அமைவாக செயற்படவுள்ளோம் என்றார்.

