Breaking
Sat. Dec 6th, 2025

– அஹமட் –

னது பதவியையும் அரசியல் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்காக, மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ்; முஸ்லிம் சமூகத்தை விலைபேசுவதற்கும் தயங்க மாட்டார் என்பதை, கல்முனை மாநகர சபைக்கான பிரதி மேயர் தெரிவின் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகவும், கல்முனை மாநரக சபை பிரிபடக் கூடாது என்றும், கல்முனை பிரதேச செயலகம் பிரிபடக் கூடாது எனவும் கோசமிட்டு வருகின்ற பிரதியமைச்சர் ஹரீஸ், அவ்வாறு நிகழ்ந்தால் முஸ்லிம்களுக்கு பாதகம் ஏற்பட்டு விடும் எனவும் கூறி வருகின்றமை அறிந்ததே.

இந்த நிலையில், கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் பதவியினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நற்பிட்டிமுனையின் முஸ்லிம் உறுப்பினருக்கு வழங்குவதற்கான சாத்தியங்கள் இருந்த போதும், அதனை தமிழரொருவருக்கு வழங்கியமையின் மூலம், பிரதியமைச்சர் ஹரீஸின் சுயநல அரசியல் அம்பலமாகியுள்ளது.

மேயர் தெரிவிவின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய மூன்று தமிழ் உறுப்பினர்களில் இருவர் மட்டுமே மு.காங்கிரஸ் நிறுத்திய சட்டத்தரணி றக்கீப்புக்கு வாக்களித்தனர். ஒருவர் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தார்.

ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 05 முஸ்லிம் உறுப்பினர்களும் சட்டத்தரணி றக்கீபுக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, பிரதி மேயர் பதவிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட எம். முபீத் என்பவருக்கு மு.காங்கிரசின் உறுப்பினர்கள் வாக்களித்திருக்க வேண்டும். அதுதான் தர்மமாகும்.

ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் காத்தமுத்து கணேஸ் என்பவர் பிரதி மேயராக வருவதற்கு மு.கா. வாக்களித்தமையானது, கீழ்தரமான அரசியல் செயற்பாடாகும். இதன் பின்னணியில் பிரதியமைச்சர் ஹரீஸ் இருந்தமைதான் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கல்முனை மாநகரம் தமிழர்களின் கைகளுக்குச் சென்று விடப் போகிறது என்று, கல்முனை முஸ்லிம்களுக்கு பூச்சாண்டி காட்டி, தனது அரசியலை இதுவரை காலமும் வெற்றிகரமாகச் செய்து வந்த, பிரதியமைச்சர் ஹரீஸின் சாயம், நேற்று திங்கட்கிழமையன்று கல்முனை மாநகர சபைக்கான பிரதி மேயர் தெரிவுடன் வெளுத்துப் போயிற்று.

தமிழர் ஒருவரை பிரதி மேயராக அரவணைத்துக் கொண்டு, கல்முனை மாநகரத்தில் முஸ்லிம்கள் அரசியல் செய்யலாம் என்று, பிரதியமைச்சர் ஹரீஸ் நிரூபிக்க முயற்சித்துள்ளார்.

எனவே, இனியும் வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகவோ, கல்முனை எல்லை விவகாரம் தொடர்பிலோ தமிர்களைக் காட்டி முஸ்லிம்களைப் பயமுறுத்தும் அரசியலை பிரதியமைச்சர் ஹரீஸ் செய்யக் கூடாது.

அப்படி ஹரீஸ் மேற்கொள்ளும் அரசியல் போலியானதாகும்.

மேலும், முஸ்லிம் சமூகம் மீது அக்கறையுடையவராகவும், முஸ்லிம் சமூகத்தின் காவலனாகவும் ஹரீஸ் தன்னைக் காட்டிக் கொள்வதற்கு எந்த விதத்திலும், அருகதையற்றவர் என்பதையும் நேற்றைய நிகழ்வுகள் காட்டிக் கொடுத்துள்ளன.

Related Post