7 வயது வரை பன்றி தொழுவத்தில் வாழ்ந்த சீன சிறுவன் மீட்பு

சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் உள்ள புயாங் நகரத்தில் 7 வயது வரை பன்றி தொழுவத்தில் வாழ்ந்து வந்த சிறுவன் மீட்கப்பட்டான். அந்த சிறுவனின் பெயர் ஹோங்போ என்று தெரிய வந்துள்ளது.

இந்த சிறுவனின் தந்தை பன்றி பண்ணை வைத்துள்ளார். தாய் மனநிலம் பாதித்தவர். இதனால் இந்த குடும்பம் தனித்து வாழ்ந்து வந்தது. தாய் மனநிலை பாதித்த பெண் என்பதால் பிறந்த குழந்தையை அவனது தந்தை பன்றி தொழுவத்தில் வைத்தே வளர்த்துள்ளார். இந்த செய்தி தினசரி பத்திரிகையில் வெளிவந்தது. உடனே, தொண்டு நிறுவனங்கள் அந்த சிறுவனை அதிரடியாக மீட்டுள்ளது.

இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் கூறுகையில் ‘‘அந்த சிறுவனின் தாய்க்கு மனநிலை சரியில்லை. அவருக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள் இருந்தனர். இதில் முதல் மூன்று குழந்தைகளை அடித்தே கொன்று விட்டார். 4-வது குழந்தை மட்டும் அருகில் உள்ள உறவினர் வீட்டில் வளர்ந்து வருகிறது. இந்த பையனையும் அடிக்கடி அவரது அம்மா அடிக்கும் சத்தம் எங்களுக்கு கேட்கும். சிறுவனின் தலையை கதவு மற்றும் சுவற்றில் மோதச் செய்வார். இதனால் அவனது தலையில் காயம் ஏற்பட்டுள்ள தழும்புகள் உள்ளன. அந்த சிறுவன் மீது இரக்கப்பட்டு நாங்கள் உணவு, உடைகள் கொடுத்து உதவினோம்’’ என்றனர்.

இதில் கவலைத்தரும் சம்பவம் என்னவெனில் அந்த சிறுவன் எந்த மொழியில் பேசுகிறான் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான்.