இளையோர் பாராளமன்றத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று

இளையோர் பாராளமன்றத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று மஹரகம இளைஞர் பேரவையில் அமைந்துள்ள இளையோர் பாராளமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதமர் ரணில்விக்ரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரிய உள்ளிட்ட பல அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் அமைந்துள்ள இளைஞர் கழகங்களில் அங்கத்தவர்களாக உள்ள இளைஞர், யுவதிகளை தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்து இவ் இளையோர் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதே இதன் நடைமுறையாகும்.

அந்த வகையில் இந்த தடவை 160 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை பல்கலைக்கழகங்கள் ,சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 65 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இதனடிப்படையில் மொத்தமாக 225 உறுப்பினர்கள் இன்று இளையோர் பாராளுமன்றத்திற்கு சமூகமளிப்பர் என்றும் இவர்களில் இருந்து பிரதமர்,சபாநாயகர் அவை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறை இளையோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு தத்தமது பிரதேசங்களில் அமைந்துள்ள இளைஞர் கழகங்களின் ஊடாக சிறந்த சேவையைப் பெற்றுக் கொடுக்க நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.