தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் பாடப்படும்!

எதிர்வரும் சுதந்திர தினத்தில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் தேசிய கீதம் பாடப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி  இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, தேசிய கீதம் சிங்கள மற்றும் தமிழ் மொழியில் பாடப்படவுள்ளது.
இதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து இந்த இறுதித் தீர்மாத்தினை எடுத்துள்ளனர்.
இந்த தீர்மானத்திற்கு ஒரு சிலரின் எதிர்ப்பு வந்த போதிலும் இந்த யோசனை நிறைவேற்றப்படவுள்ளது.
இதனடிப்படையில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தேசிய கீதத்தினை தமிழ் சிங்கள மொழியில் பாடப்படும் நடைமுறையை இந்த தேசிய தினத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.