கொலம்பியாவில் 52 ஆண்டுகளுக்கு பிறகு உள்நாட்டு சண்டை நிறுத்தம்

தென்னமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் கடந்த 52 ஆண்டுகளாக அரசு படைகளுக்கும், இடதுசாரி ‘பார்க்’ கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வந்தது.

இதன் காரணமாக 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். பல லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். இந்நிலையில் அரசுக்கும், ‘பார்க்’ கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தையில் இந்த அரை நூற்றாண்டுகால சண்டையை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.

இதுதொடர்பாக கொலம்பியா அரசு தரப்பினரும், ‘பார்க்’ என்றழைக்கப்படும் மார்க்சிஸ்ட் கொரில்லா போராளிகளும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இருவரும் இருதரப்பினரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர்.

வரும் 29-ம் தேதியில் இருந்து அரசு தரப்பினரும்  ‘பார்க்’ கிளர்ச்சியாளர்களும் ஆயுதங்களை துறந்து சமாதானத்தில் ஈடுபடுவார்கள் என அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி கொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ் குறிப்பிடுகையில், “துன்பம், வேதனை, துயரம் ஆகியவற்றின் முடிவுக்கான ஆரம்பம்தான் சண்டை இந்த நிறுத்த உடன்பாடு” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

சமாதான உடன்படிக்கை எட்டப்பட்ட தகவலை அறிந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஜூவான் மேனுவலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், சண்டை நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்தியதற்காக ஜூவான் மேனுவலுக்கு பாராட்டு தெரிவித்தார்.