பெற்றோருக்கு என்ன பதில் சொல்வேன்!- ராம்குமாரின் வக்கீல் வருத்தம்

ராம்குமாரை என்னுடைய மூத்த பிள்ளையைப் போல பார்த்துக்கொள்வதாக அவர்களின் பெற்றோரிடம் கூறியிருந்தேன். இனி என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என்று அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியுள்ளார்.

ஜாமீன் கிடைத்த பின்னர் கொலையில் உள்ள முக்கியத்தடயங்களை வெளியே சொல்வதாக சொன்னார். அதற்குள் அவரை கொன்று விட்டனர் என்றும் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் இன்று புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மின் கம்பியை கடித்து அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்ற பிறகு மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக உறுதி செய்தனர்.

இந்நிலையில் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பார்க்க வந்த அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நேற்று காலை 11.30 மணி முதல் 1 மணிவரை ராம்குமாரை அவர் சந்தித்துள்ளார்.

ராம்குமாரின் பாதுகாப்பு பற்றி கேட்டதற்கு தான் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் நேற்று சிறை காவலர் விஜயகுமார் என்பவர் இட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளதால், திட்டமிட்டு ராம்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று வழக்கறிஞர் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.