Breaking
Sun. Dec 7th, 2025

கல்குடா பிரதேசத்தில் உல்லாசப் பயணிகள் அதிகம் வருகின்ற பிரதேசம் என்பதால் நவீன முறையில் சிகை அலங்காரத்தை தொழிலாக செய்பவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிகை அலங்கார சங்கத்திற்கு நவீன வசதிகள் கொண்ட அலங்கார பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

சிகை அலங்காரத்தை தொழிலாக செய்பவர்கள் உல்லாச பயணிகளை கவரும் வகையிலும், சுத்தம் சுகாதாரத்துடன் சேவையை செய்யும் முகமாக நவீன முறையில் மாற்றுவதற்கு முதல்கட்டமாக உதவிகளை வழங்கியுள்ளேன்.

அவ்வாறு இயங்கும் பட்சத்தில் உல்லாச பயணிகள் தங்களை நாடி வருவார்கள். அதன் மூலம் தங்களுடைய தொழிலை அதிகரித்துக் கொள்ள முடியும். நான் இவ்வாறு வழங்குவது போன்று ஏன் வேறு அரசியல்வாதிகள் வழங்குவதில்லை என்று சற்று சிந்தித்து பாருங்கள் என்றார்.

ஓட்டமாவடி சிகை அலங்கார சங்கத்தின் தலைவர் எஸ்.பாபூஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.எம்.ஏ.ஹாதி, ஏ.எல்.பாறூக், எச்.எம்.எம்.பைரூஸ், அமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.றிஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது சிகை அலங்கார சங்கத்தின் உறுப்பினர்கள் பதின் மூன்று பேருக்கு ஆறு இலட்சம் பெறுமதியான சிகை அலங்கார பொருட்கள் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டது.

Related Post