பதுளை-மீறியபெத்தை இடம்பெற்ற மண்சரிவினைத் தொடர்ந்து தமக்கு பாதுகாப்பான சொந்த வீடு, சொந்த காணி வேண்டும் என்ற குரல் மலையகத்திலிருந்து வெளிவரத் தொடங்கிவிட்டன.
அண்மையில் கொஸ்லாந்தை மீறியபெத்தை தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு அனுதாபங்களை தெரிவித்து மலையகத்தின் பல்வேறு தோட்டப்பகுதிகளிலும் பேரணி, ஆர்ப்பாட்டம், அஞ்சலி கூட்டம் நடைபெற்று வருகிறது.
இவ்வாறான அனர்த்தங்களுக்கு இனிமேல் இடமளிக்காமல் மலையக மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஒட்டுமொத்த மலையக மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லாது ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்கின்றனர். ஹோல்றிம் கொணன், லெந்தோமஸ், கவுலினா, மெராயா, லிப்பக்கலை போன்ற பிரதேசங்களிலுள்ள தோட்டத்தொழிளார்கள் நேற்று, இன்றும் அஞ்சலி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதுவரை காலமும் தாங்கள் அடிமைகளாகவே வாழ்ந்து வருகின்றோம் இதனால் தாங்கள் பாரிய அசெளகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றோம். மீறியபெத்தையில் இடம்பெற்றதைப் போல எங்களுக்கும் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே எங்களது பிரச்சினைகள் தொடர்பாக அரசியற் கட்சிகள் குரல் கொடுத்து பாதுகாப்பான வீடு,காணி ஒன்றை பெற்றுத் தர உதவி செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.