அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் முஸ்லிம் காங்கிரஸும் வாக்குகளும் ஆசனங்களும்!

கடந்த 10 ஆம் திகதி  நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை  மாவட்ட முஸ்லிம்வாக்காளர்கள் கட்சிகளுக்கு அளித்துள்ள  வாக்குகளின் அடிப்படையில்  அமைச்சர்  ரவூப் ஹக்கீம்  தலைமையிலான  முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்து  காணப்படும் நிலையில் அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் தலைமையிலான  அகில  இலங்கை  மக்கள் காங்கிரஸின்  வளர்ச்சி சற்று அதிகரித்துள்ளதை  அவதானிக்க  முடிகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் வாக்களிக்கும் 10 உள்ளூராட்சி சபைகளில் 9 சபைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலும், காரைதீவு பிரதேச சபையில் மரச் சின்னத்திலும் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ், மொத்தமாக 66, 563 வாக்குகளைப் பெற்றுள்ளதன் மூலம் இக்கட்சிக்கு 55 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் போட்டியிட்டு 40, 407 வாக்குகளைப் பெற்றுள்ளதன் மூலம் 31 ஆசனங்கள் இக்கட்சிக்கு கிடைத்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ், அம்பாறை மாவட்டத்தில் 88 ஆசனங்கள் கொண்டிருந்த 10 சபைகளில் மொத்தமாக 42 ஆசனங்களைக் கொண்டிருந்தது. தற்போது 177 ஆசனங்களைக் கொண்டுள்ள இச்சபைகளில் 55 ஆசனங்களை மாத்திரமே இக்கட்சி பெற்றுள்ளது.

கடந்த முறை 19 ஆசனங்களைக் கொண்டிருந்த கல்முனை மாநகர சபையில் 11 ஆசனங்களையும், 7ஆசனங்களைக் கொண்டிருந்த நிந்தவூர் பிரதேச சபையில் 6 ஆசனங்களையும், 9 ஆசனங்களைக் கொண்டிருந்த பொத்துவில் பிரதேச சபையில் 6 ஆசனங்களையும், 7 ஆசனங்களைக் கொண்டிருந்த இறக்காமம் பிரதேச சபையில் 5 ஆசனங்களையும், 9 ஆசனங்களைக் கொண்டிருந்த அட்டாளைச்சேனைப் பிரதேச சபையில் 7 ஆசனங்களையும் பெற்று முஸ்லிம் காங்கிரஸ் தனியாக ஆட்சி செய்திருந்தது. ஆனால், இம்முறை அக்கட்சியினால் எந்தவொரு சபையிலும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கு முஸ்லிம் காங்கிரஸுக்கு அளிக்கப்பட்ட வாக்கு வீதத்தையும், 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி இக்கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்கு வீதத்தையும் ஒப்பீட்டுப் பார்க்கும் போது, இதனைத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது.

 

 

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் 2011 ஆம் ஆண்டு  உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துக்  கேட்டு எடுத்த வாக்குகளும், 2018 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து  அம்பாறை மாவட்டத்தில் பெற்றுக்கொண்ட வாக்குகளும்,

 

 

2018.02.10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில்  அம்பாறை மாவட்டத்தில் 177 ஆசனங்கள் உள்ள 10 சபைகளில் முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் பெற்ற வாக்குகளும் ஆசன எண்ணிக்கைகளும் வருமாறு,

 

 

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்டத்தில் மொத்தமாக 33 ஆயிரத்து 102 வாக்குகளைப் பெற்றிருந்தது.  இத்தேர்தலில் இக்கட்சி மொத்தமாக 40 ஆயிரத்து 407 வாக்குகளைப் பெற்றிருக்கின்றது.

இதேவேளை,முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் அக்கரைப்பற்று மாநகரசபையையும் அக்கரைப்பற்று பிரதேச சபையையும்  தனித்து ஆட்சி செய்வதற்குரிய பலத்தைப்  பெற்றிருக்கிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு 9 ஆசனங்கள் கொண்டிருந்த  அக்கறைப்பற்று மாநகர சபையில் தேசிய காங்கிரஸ்8 ஆசனங்களைப் பெற்றிருந்தது. இது போன்று 7 ஆசனங்கள் கொண்டிருந்த அக்கரைப்பற்று பிரதேசசபையில் 6 ஆசனங்களை தம் வசம் வைத்திருந்தது.

தற்போது 20 ஆசனங்கள் கொண்டுள்ள அக்கறைப்பற்று மாநகர சபையில் 13 ஆசனங்களையும் 8 ஆசனங்கள்கொண்டுள்ள அக்கறைப்பற்று பிரதேச சபையில் 5 ஆசனங்களையும் வென்று தேசிய காங்கிரஸ் இருசபைகளையும் தன் வசமாக்கிக் கொண்டிருக்கிறது.

ஏ.எல்.ஜுனைதீன்