Breaking
Thu. May 2nd, 2024

-ஊடகப்பிரிவு-

சிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது.

முசலிப் பிரதேச செயாலாளர் வசந்த குமாருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் இன்று காலை (23) நடாத்திய பேச்சுவார்த்தையின் போதே, வீட்டுத்திட்ட பிரச்சினையை சுமுகமான முறையில் தான் தீர்த்துத் தருவதாக பிரதேச செயலாளர் உறுதியளித்தார்.

 

இந்த சந்திப்பில் வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் செரீப், முசலிப் பிரதேச சபையின் தவிசாளர் சுபியான், பிரதித் தவிசாளர் முஹுசீன் றைசுதீன் மற்றும் முசலிப் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் சிலாவத்துறையில் 43 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெற்ற பின்னர், அந்தப் பிரதேசத்துக்கு அண்மையில் அமைந்துள்ள கொக்குப்படையான் கிராமத்தைச் சேர்ந்த சிலர் குறிப்பிட்ட காணிக்கு உரிமை கோரி, பிரதேச செயலாளரிடம் முறையிட்டிருந்தனர்.

அத்துடன், அந்தப் பிரதேச அரசியல்வாதிகள் சிலர் வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் எனவும், இடைநிறுத்துமாறும் பிரதேச செயலாளருக்கு அழுத்தம் வழங்கியதை அடுத்து, வீட்டுத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை முசலிப் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் இடம்பெற்ற போது, இந்த விவகாரம் சூடு பிடித்த நிலையில், பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது, பரஸ்பர விட்டுக்கொடுப்புடன் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, இன நல்லுறவை ஏற்படுத்த வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தி இருந்தார்.

அதன் பின்னர்,  பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட், காதர் மஸ்தான் எம்.பி, சார்ள்ஸ் எம்.பி உட்பட மாகாண சபை உறுப்பினர் அலிகான் செரீப் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் அந்தப் பிரதேசத்துக்கு விஜயம் செய்து, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட சாரார்களிடம் விபரங்களைக் கேட்டறிந்தனர்.

அதன் தொடர்ச்சியாகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், பிரதேச செயலாளரைச் சந்தித்து இந்த விடயங்களுக்குத் தீர்வைப் பெற்றுள்ளனர்.

 

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *