Breaking
Tue. Apr 30th, 2024

புத்தளம் உப்பளங்களை அரசு அபகரிப்பதை அ.இ.ம.காங்கிரஸ் வன்மையாக எதிர்க்கின்றது.

இந்த நில அபகரிப்பையெதிர்து 31/07/2028 ல் புத்தளத்தில் நடந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தை ஆதரிக்கின்றோம்.

உரிமைகள் சாய்ந்தால் உடமைகள் மாயும்.

உரிமைக்குக் குரல் கொடுப்போம்
வறுமைக்கு விடை கொடுப்போம்.

” நிலம் ” என்பது மனித வாழ்வின் உயிரோடும் உரிமையோடும் பின்னிப் பிணைந்துள்ளது. “நில” உரிமைப் போராட்டமே உலகின் போராட்டம் களுக்குக் காரணமாயுள்ளது. ” நிலம் ” என்பது உங்களுடைய மூதாதையரால் உங்களுக்கு வழங்கப்பட்டதல்ல ; மாறாக அது உங்களது எதிர்கால சந்ததியினரால் உங்களுக்கு அமானிதக் கடனாக வழங்கப்பட்டது ” என்று 1850ல் புகழ் பெற்ற செவ்விந்தியத் தலைவர் “ஜெரோநிமோ” கூறியுள்ளார்.
வடபுல முஸ்லிம்கள் 1990ல் புலிகளால் வெளியேற்றப்பப்டதோடு அவர்களின் நிலங்கள் வடக்கிலும் கிழக்கிலும் அபகரிக்கப்பட்டன . கிழக்கில் 62,000 ஏக்கர் நிலமும், வடக்கில் 30,000 ஏக்கர் நிலமும் புலிகளால் பறிக்கப்பட்டு இன்று அவை வெவ்வேறு ஆளுமையின் கீழும், ராணுவத்தின் கீழும் இருப்பதால் உரிமையுள்ள முஸ்லிம்கள் நிலயுரிமையிழந்து வாழ்கின்றனர். இதனை மீட்க எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது முஸ்லிம்களின் “நில” உரிமை விடயத்தில் “நெஞ்சிலோர் முள்ளாகவே இருக்கின்றது.

பகற்கொள்ளை போன்ற மாபெரும் நிலக்கொள்ளையொன்று முஸ்லிம்களுக்கெதிராக 2017 மார்ச் மாதம் 24ம் திகதி வெள்ளிக்கிழ‌மை அரங்கேற்றப்பட்டது. 40,030.525 ஹெக்டேக்கர் (1,00,076 ஏக்கர்)நிலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் கையொப்பமிடப்பட்ட 2011/34 இலக்க வர்த்தமானி மூலம் அபகரிக்கப்பட்டு வன இலாகாவுக்கு தாரைவார்க்கப்பட்டது.

மன்னார் மாவட்ட முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்நிலங்களில் அதிகமானவை முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகளாகும். மேலும் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒரேயொரு பிரதேச்செயலாளர் பிரிவு முசலி யேயாகும், என்பதைக்கோடிட்டுக்காட்ட விரும்புகிறோம். இங்குதான் சிலாவத்துறை, மறிச்சிக்கட்டி,கொண்டாச்சி , பாலைக்குழி, கரடிக்குழி போன்ற மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகள் அமைந்துள்ளன.

புலிகளால் விரட்டப்பட்டு 28 வருடங்கள் அகதிகளாக அலைந்து திரிந்து யுத்தம் முடிந்து அமைதி நிலவுகின்றது என்ற நம்பிக்கையோடு தமது சொந்த இடங்களில் வாழ்வதிதற்குத் திரும்பும்போது, வாழவைக்க வேண்டிய அரசே தங்கள் பூர்வீக நிலங்களைக் கைப்பற்றியிருப்பது , மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மோதிய கதையாகவுள்ளது.

முஸ்லிம்களின் நிலம், வவுனியா மாவட்டத்தின் செட்டிக்குளப்பிரிவின் சூடுவெந்தபிளவு கிராமத்தில் 500 ஏக்கரும், சாளம்பைக்குளம் கிராமத்தில் 600 ஏக்கரும் அதே செயலாளர் பிரிவில் பூலிதரித்த புளியங்குளம் கிராமத்தில் 15 ஏக்கரும் வன இலாகாவால் கைப்பற்றப்பட்டுள்ளது . ஆண்டியா புளியங்குளத்தில் 25 ஏக்கர் ராணுவ முகாமுக்காகப் பறிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுடைய நிலங்கள் வவுனியா தமிழ் பிரிவில் வேளாங்குளம் கிராமத்தில் 300 ஏக்கர் நிலமும், ஓமந்தையில் 300 ஏக்கர் 500நிலமும் வவுனியா வடக்கு பி.செ.லர் பிரிவில் 500 ஏக்கர் நிலமும் வன இலாகாவால் கைப்பற்றப்பட்டுள்ளது. வடக்கிலே கோப்பாப்பிளவு பகுதியில் தமிழ் மக்களின் நில மீட்புப் போராட்டம் ஒரு வருடத்தையும் தாண்டியுள்ளது. இத்தகைய நில மீட்புப் போராட்ட ங்கள் நிலக்கையாடள்கலுக்கெதிராக பாதிக்கப்பட்ட தமிழ் -முஸ்லிம் மக்களால் ஒன்று சேர்ந்து மேற்கொள்ளப்படவேண்டும்.

நாட்டின் நாலாபுறமும் சிதறி வாழும் முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்களும் வர்த்தக நிறுவனங்களும் பொருளாத முயற்சிகளும் தாக்கப்பட்டு முடக்கப்பட்டு அடக்கப்பட்டுள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிலக்கபளீகரம் சுட்ட புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகவுள் ளது .
1970 களில் பொருளாத அபிவிருத்தி என்ற பெயரில் கம்பக மாவட்டத்தின் பியகம பிரதேசத்தில் வர்த்தக வலயம் அமைக்க முஸ்லிம்களின் 400 ஏக்கர் நிலம் அரசினால் கையகப்படுத்தப்பட்டு அதற்கு அற்பத்தொகையே நட்ட ஈடாக வழங்கப்பட்டது.

வழக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்களின் நிலங்களை, நிலப்பசி பிடித்த அரசு கொள்ளையடித்தது போதாதென்று இப்பொழுது 200 வருடங்களுக்கு மேலாக தமது பூர்வீக நிலங்களில் உப்புச்செய்கையை மேற்கொண்டுள்ள புத்தள முஸ்லிம்களின் ” உப்பளங்களைப் பறிமுதல் செய்ய முற்பட்டிருக்கும் அரசாங்கத்தின் இச்செயல் இரத்த வெறிபிடித்த வேங்கையின் மிருக வேட்டையைப்போள் அமைந்துள்ளது.

510 ஏக்கரில் உப்புத்தொழிலை மேற்கொண்டுள்ள நிலம் , 362 ஊர்மக்களுக்குச்சொந்த மானதாகும். 5000 க்கு‌ம்மே‌ற்ப‌ட்ட மக்களின் ஜீவனோபாயம் இத்தொழிலில் தங்கியிருக்கும் நிலையில் இதில் 75 சதவீதத்திற்கு மேற்பட்டோர் குரைத்த வருமானம் பெறுபவர்களாகவேயுள்ளனர். இங்கு விளையும் உப்பை அரச உப்புக்கூட்டுத்தாபணத்ற்கே விற்று வந்தனர். 1990ம் ஆண்டு டாக்டர் இல்லியாஸ் மேற்கொண்ட போராட்டத்தின் பின் நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்த உப்பை தனியாருக்கும் விற்பனை செய்யும் உரிமம் கிடைத்தது.

தொல்பொருள் ஆய்வு மையம் எஎன்றும் புனித பூமியென்றும் பிரகடனம் செய்து முஸ்லிம்களின் நிலங்களைக் குறிவைத்துள்ளனர் .அம்பாறை மாவட்டத்தில் 600 கும் மேற்பட்ட இடங்கள் தொல்பொருள் அகழ்வு மையங்களாக அடையாளப்படுத்தி அதில் 300 ருக்கு மேற்பட்ட அகழ்வு நிலையங்களை முஸ்லிம் பிரதேசங்களில் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். உதாரணமாக சிறு நிலப்பரப்பையும் பெரும் மக்கள் தொகையையும் கொண்ட சம்மாந்துறைப்பிரதேசதுதில் மட்டும் 33 இடங்களில் தொல்பொருள் அகழ்வு மையங்களை அமைக்கத்திட்டமிட்டுள்ளனர். இது உள்நோக்கம் கொண்ட திட்டமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உப்பளங்களைக் கைப்பற்றும் முயற்சியை அரசாங்கம் கைவிட்டு, மேற்கூறிய முஸ்லிம்களின் நிலங்களை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என்று வன்மையாக வேண்டி நிற்கின்றோம்.

-ஊடக அறிக்கை-

எஸ், சுபைர்தீன்
செயலாளர் நாயகம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.

Related Post