Breaking
Sat. Dec 6th, 2025

மன்னார் முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில்   வெளி மாவட்டங்களை சார்ந்தோர்  மண் அகழ்வதை உடனடியாக தடை செய்யும் வகையிலான பிரேரணை ஒன்றை கொண்டு வருமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்த ஆலோசனைக்கிணங்க   முசலி மீளாய்வு கூட்டத்தில் அதற்கான ஏகமானதான   தீர்மானம் எடுக்கப்பட்டது.

முசலி பிரதேச செயலக மீளாய்வுக்கூட்டம் இன்று காலை (06) பிரதேச செயலாளர் வசந்த குமாரவின் நெறிப்படுத்தலில்  இடம்பெற்ற போது,

உள்ளூர் பிரதேசங்களில் வீடுகளை கட்டுவதற்கென  மண் எடுப்பதற்கு  அதிகாரிகளும் பொலிஸாரும் அனுமதிக்க மறுக்கிறார்கள்  என்றும் அதற்கான பெர்மிட் வழங்குவதை இழுத்தடிக்கின்றார்கள் என்றும் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்தே அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கினார்.

முசலி  மீலாத் விழாவையொட்டி அந்த பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் 700 வீடுகளை கட்டி முடிப்பதில் மண் தட்டுப்பாடே பிரதான தடையாக இருப்பதாக  இந்த கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

“மக்களின் தேவைகளுக்கே அரச உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும் முன்னுரிமை வழங்க வேண்டும்   பொலிஸ் அதிகாரிகளும் , படையினரும்  மக்களின் தேவை  அறிந்து செயற்பட வேண்டும் . அது மாத்திரமன்றி பொலிஸார் வீணான கெடுபிடிகளை தவிர்க்க வேண்டும். வியாபாரிகளுக்கும் மண் கள்வர்களுக்கும் உதவ கூடாது. முள்ளிக்குளத்தில் வாழ்பவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து மண் கொண்டுவர  வேண்டிய நிர்ப்பந்தத்தம் ஏற்பட்டுள்ளது. தமது ஊர்களுக்கு அண்மையிலுள்ள கல்லாறு , உப்பாறு பகுதிகளில் மண் அகழ்வதற்கு இவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. வெளி மாவட்டக்காரர்களுக்கு அங்கு இடமளிக்கப்படுகின்றது. அமைச்சரவை அனுமதி என்ற பெயரில் இந்த அநியாயம் நடத்தப்படுகின்றது”.என்று கூறிய அமைச்சர்   முசலி பிரதேச சபை தவிசாளர்  தனது அதிகாரத்தை இந்த விடயத்தில் பயன்படுத்த வேண்டும். தேவை ஏற்படின் பொலிசில் முறைப்பாடொன்றையும் அவர்  பதிவு செய்து துணிவுடன் தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இங்குள்ள அப்பாவி பொது மக்கள் ஒரு டிப்பர் மண்ணை 35 ஆயிரம்  ரூபாவுக்கு எவ்வாறு வாங்க முடியும் என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் உடனடியாக இந்த விடயத்தை கவனத்திற்கு எடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிகாரிகள் மற்றும்  பொலிஸாரை  பணித்தார்.

Related Post