Breaking
Sat. Apr 27th, 2024

நாட்டின் அமைதி.இன ஐக்கியத்தை பதற்றத்திற்குள்ளாக்கும் வகையில் கொழும்பில்  நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் ரிஷாத்பதியுதீன், அமைதிக்கு எதிரான சதிகாரர்களை அரசாங்கம் உடனடியாக அடையாளம் காண வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். இன்று  (21) கொழும்பில் நடாத்தப்பட்ட சம காலத்தாக்குதல்கள் மற்றும் மட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, முப்பது வருட யுத்தம் மிகப்பெறுமதியான விலைகொடுத்து முடித்து வைக்கப்பட்டது.இதற்குப் பின்னரான ஒரு தசாப்த கால நிசப்தத்தை தகர்க்கும் வகையில் இத்தாக்குதல்கள் உள்ளன. மத உணர்வுகளையும். சிவிலியன்களின் சாதாரண வாழ்க்கையையும் இத்திட்டமிட்ட தாக்குதல்கள்  அச்சுறுத்தியுள்ளன.

குறிப்பாக  கிறிஸ்தவ சகோதரர்கள் புனித ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடுகையில் தேவாலயங்கள் வன்முறைக்குள்ளானமை பெரும் அதிர்ச்சியளிக்கிறது.மதச் சுதந்திரங்களைப் பறித்து,மத உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ள இந்தக் கயவர்களை எவ்விதக் கருணைகாட்டாது தண்டிக்க வேண்டும்.எந்த நோக்கங்களையும் அடைந்து கொள்ள வன்முறைகள் வழிமுறையாகப் பின்பற்றப்படக் கூடாது.இலங்கை போன்ற ஜனநாயக நாடுகளில் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு இனி இடமிருக்கக் கூடாது.

இந்நெருக்கடியான நிலையில் சில விஷமிகள் சமூக முறுகல்களைத் தூண்டிவிட முனைவது வேதனையளிக்கிறது.ஏப்ரல் 11 ஆம் திகதி இணையங்களில் வெளியான கடிதத்தை வைத்து முஸ்லிம் அமைப்புக்களில் முடிச்சுப்போடும் முயற்சிகளும் நிறுத்தப்பட வேண்டும்.புலனாய்வுத்துறை  விசாரணைகளை நடத்தி சூத்திரதாரிகளைக் கண்டறியும் வரை சட்டத்தை எவரும் கையிலெடுக்கக் கூடாது.இந்த வன்முறையில் உயிரிழந்த இறைவிசுவாசுகளின் சகல குடும்பத்தினர்,உறவினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Post