Breaking
Mon. Apr 29th, 2024

காலாகாலமாக அம்பாறை மாவட்ட மக்கள் வாக்களித்தவர்கள், வென்று பாராளுமன்ற கதிரையை சூடாக்கியதை தவிர வேறு எந்த உரிமையையும் இம்மாவட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை என முதன்மை வேட்பாளர் சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல வேட்பாளர் வை.கே.றஹ்மான் தலைமையில், மருதமுனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதலாவதாக களமிறங்கியபோது, குறிப்பிட்ட வாக்குகளை அளித்து மக்கள் எங்களுக்கு ஆதரவினை வழங்கினர். ஆனால், கடந்த முறை நீங்கள் வாக்களித்தவர்கள் உங்களுக்கு செய்தது என்ன? அவர்கள் பாரளுமன்றம் சென்று கதிரைகள் சூடாக்கப்பட்டதே தவிர, எதுவும் செய்யப்படாத நிலையிலேயே மீண்டும் உங்களிடம் வாக்குகளுக்காக வந்துள்ளார்கள்.

இவர்களது பொய் பித்தலாட்டத்தையும், ஏமாற்று யுக்திகளையும் நன்கு அறிந்துள்ள மக்கள், தற்போது இவர்களுக்கு சிறந்ததொரு பாடத்தினை புகட்டுவதற்கு, ஆயத்தமாவதை மாவட்டம் முழுவதும் காணக்கூடியதாக உள்ளது.

இந் நிலையில், இம்முறை பொதுத் தேர்தலில், திகாமடுல்ல மாவட்ட மக்கள் ஒரு இலட்சத்துக்கு மேல் வாக்குகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும்போது, எமது கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களிலருந்து 3 பேர் தெரிவு செய்யப்பட முடியுமாக இருந்தால், எதிர்வரும் நாடளுமன்றத்தில் இணக்க அரசியலாக இருந்தாலும், எதிர் அரசியலாக இருந்தாலும் அவற்றிற்கு எவ்வாறு காத்திரமாக முகங்கொடுப்பது என்பதை இந்த சமூகத்திற்றுக்கும், நாட்டிற்கும் நாம் காட்டுவோம்.

எனவேதான், மாவட்டத்தில் ஒரு இலட்சத்துக்கு மேல் வாக்களிக்ககூடிய சாத்தியம் உள்ள போதும், இந்த வாக்கு அதிகரிப்பை வேட்பாளர்கள் கட்சி அங்கத்தவர்கள் மாத்திரம் செய்துவிட முடியாது. “சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள், இவர்கள்தான் உங்களுக்காக என்றும் சேவை செய்பவர்கள் என நீங்கள் எங்களை நம்பினால் எதிர்வரும் தேர்தல் முடிவின் போது 3 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியை நீங்கள் ஒவ்வோருவரும் சொல்ல வேண்டும். நீங்கள் இதற்காய் முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் அம்பாரை மாவட்டத்தில் காத்திரமான உறுப்பினர்களை பெற முடியும்.

இம்முறை தேர்தலை, மக்கள் மிகவும் புத்திசாதுரியமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தேவை இருக்கின்றது. என்றுமில்லாதவாறு இம்முறை பாராளுமன்றம், சிறுபான்மை மக்களுக்கு பெரும் சவால் நிறைந்தததாக இருக்கும்.

இந்த அரசு கடந்த 2010 ஆம் ஆண்டு, யுத்த வெற்றியைக்கொண்டு, அதனை முதலீடாக மாற்றி, மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்று. அதனூடாக பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, இந்த யுத்த வெற்றியை கொண்டே அனைத்து தடைகளையும் வெற்றிகொண்டார்கள்.

அந்த நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம்தான் சரியான தேர்தல் வியூகம் என்று புரிந்துகொண்டு, நல்லாட்சி காலத்திலும் அதன் பின்பும் நடந்த தேர்தல்களிலும் முழுக்க முழுக்க இனவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, அதன் வெற்றியைக் கொண்டாடி, கடந்த தேர்தலில் அவர்கள் அறுவடை செய்தார்கள். அதே இனவாத நடைமுறையைத்தான் இந்த பொதுத் தேர்தலிலும் அவர்கள் முன்வைக்கின்றார்கள்.

எனவேதான், இவ்வாறான ஆட்சியாளர்களிடமிருந்து எமது சமூகம் விடுதலை பெற வேண்டுமென்றால், சுபீட்சமாக எமது நாட்டிலே மூவினமும் வாழ வேண்டுமென்றால், பொய் வாக்குறுதிகளுடன் காலத்திற்குக் காலம் மக்களை ஏமாற்றிவிட்டு, சுகபோகம் அனுபவிக்கின்ற அரசியல்வாதிகளை இம்முறை மக்கள் புறந்தள்ளிவிட வேண்டும்.

இனிவரும் காலங்களில் மக்கள் அரசியல் முதிர்ச்சி பெற்ற, படித்த, சவால்களுக்கு முகங்கொடுக்கின்றவர்களை இனங்கண்டு சவால்மிக்க பாராளுமன்றுக்கு அனுப்ப வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

Related Post