பழுலுல்லாஹ் பர்ஹான்
இலங்கை முஸ்லிம்களின் குடும்பச் சட்டம் படிப்படியாக பொதுச் சட்டத்தின் செல்வாக்கைவிட, இஸ்லாமிய சட்ட விதிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டு வருகிறது.
ஆயினும் எம் நாட்டில் அதிகமானவர்கள் பொதுச் சட்டத்தினாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலங்கைப் பிரஜைகள் தனியார் சட்டங்களினாலும், ஆளப்படுகின்றனர்.
குடும்பம் என்பது இஸ்லாமிய சமூக அமைப்பின் அடிப்படையாகும். மனிதனின் இச்சையை நெறிப்படுத்தி, ஆக்க சக்தியாக மாற்றி இஸ்லாம் வகுத்துத் தந்த வழிமுறையே திருமணம் ஆகும்.
இவ்வாறு உரிய முறையில் நெறிப்படுத்தப்படாத போது, அது ஒரு பாரிய அழிவு சக்தியாக மாறி சமூகத்தில் கலாசார சீர்கேடுகள் ஏற்படக் காரணமாக அமையும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டு மாவட்ட இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
ஏறாவூர் சமூக அபிவிருத்தி மன்றத்தினால் உலமாக்களுக்கான ‘முஸ்லிம் சட்டமும், பொதுச் சட்டமும்’ எனும் தொனிப் பொருளிலான செயலமர்வு இன்று (14) புதுக்குடியிருப்பு கிராம பயிற்சி மண்டபத்தில் நிறுவனத்தின் இணைப்பாளர் ஜனாப். எஸ்.ஏ.சி. நஜிமுதீன் அவர்களின் தலைமையில் நிகழ்ந்த போது, வளவாளர் அஸீஸ் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,
எமது நாட்டிலுள்ள தனியார் சட்டங்களாக கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லிம் சட்டம் என மூன்று சட்டங்கள் வலுவில் இருக்கின்றது. நவீன உலகில் வாழும் மனிதன் பல புதிய பிரச்சினைகளை எதிர்நோக்குகிறான்.
அந்தப் பிரச்சினைகளுக்கு அவனுக்கு இஸ்லாமியத் தீர்வு கொடுக்கப்படும் போதுதான் இஸ்லாமிய வரையறையினுள் அவனை வாழ வைக்க முடியும். ஆண், பெண் இருவருக்கும் தம் வாழ்க்கைத் துணையை நிலையான அடிப்படைகளின் மீது கவனமாக தெரிவு செய்யுமாறு இஸ்லாமிய சமயம் விரும்புகிறது.
ஒரு ஆண் தனக்குரிய துணையாக ஒரு பெண்ணை நான்கு காரணங்களுக்காக திருமணம் முடிக்க அனுமதியுண்டு. அவளின் செல்வம், அழகு, குடும்பம், மார்க்க உணர்வு இதனைக் கவனத்திற் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.
ஒரு பெண்ணைத் திருமணம் முடித்துக் கொடு;க்கும் போது அவளுக்கு கணவனாக வருபவனோடு அவள் விருப்பத்துடன் இருக்கிறாளா எனப்பார்ப்பதை இஸ்லாம் கடமையாக்குகிறது.
அவளது விருப்பத்திற்கு முரணாக திருமணம் செய்து கொடுப்பதை இஸ்லாம் தடை செய்கிறது. அவ்வாறு செய்தால் அத்திருமணத்தை ரத்துச் செய்து கொள்ளும் உரிமையும் அவளுக்கு வழங்குகிறது.
காழி நீதிமன்றம் மூலம் இதனை அவள் செய்து கொள்ளலாம். ஆனால் முற்று முழுதாக திருமணத்தை நடாத்தும் பொறுப்பை பெண்ணின் கையிலேயே இஸ்லாம் விட்டு விடவில்லை.
இன்னொரு பக்கத்தால் அவளை கட்டுப்படுத்தவும் செய்கிறது. இப்படி திருமண ஒப்பந்தத்தில் முழுச் சுதந்திரத்தையும் கொடுத்து விடாமலும், அதே வேளை அவளுக்கு அநியாயம் நடக்காதிருக்க கணவனை தெரிவு செய்யும் உரிமையையும் வழங்கியிருப்பதை பெண்ணின் இயல்பை கவனத்திற் கொள்ளும் சிறந்ததொரு ஒழுங்காகவே நாம் கருத முடியும்.
இளவயதுத் திருமணங்கள் இன்று எத்தனையோ பிரிவிடை வழக்குத் தொடரப்பட்டு காழி நீதிமன்றங்களில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு சமூகச் சீர்கேடாகவும் நோக்கப்படுகிறது. இஸ்லாம் ஒரு சீரான சமுதாயத்தை எதிர்பார்கிறது. அதற்கான சமுதாய அமைப்பொன்றை உருவாக்கித் தந்துள்ளது.
அவ் அமைப்பு தனிநபரிலிருந்து குடும்பமாகவும், குடும்பத்திலிருந்து சமுதாயமாகவும் விரிந்து செல்கிறது. அந்த வகையில் தனிநபர் குடும்ப நிலையை அடைய பாலமாக அமைவது திருமணமாகும் என அஸீஸ் அவர்கள் மேற்கண்டாறு தெரிவித்தார்.

