Breaking
Sun. May 19th, 2024

இலங்கை கடற்படைக்காக இரண்டு கப்பல்களை இந்தியா கட்டி வருவதாக இந்திய பாதுகாப்பு துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியா, இதுவரை மிக அரிதாகத்தான் ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது.

தற்போது முதல் முறையாக போர்க் கப்பல் ஒன்றை வெளிநாடு ஒன்றுக்கு இப்போது ஏற்றுமதி செய்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ரோந்துக் கப்பலை மோரிசியஸ்சுக்கு அளிக்கும் நிகழச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், இரண்டு ரோந்துக் கப்பல்களை இந்தியாவிடம் இருந்து விலைக்கு வாங்க இலங்கை கோரியுள்ளதாகவும், அந்தக் கப்பல்கள் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து ஏற்றுபமதி செய்யப்படும் இக்கப்பல்கள் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவும்,

இதற்கு அந்நிய நாடுகளின் ஒப்புதல் ஏதும் தேவையில்லை என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா ஆர்வம்

வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் செய்துகொண்டு, தொழில்நுட்பத்தைப் பெற்று நவீன ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிவருகிறார்.

மேக் இன் இந்தியா என்ற அரசின் கொள்கைக்கு ஏற்ப, ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட சில ஆயுதங்களுக்கு ஏற்கனவே விடப்பட்ட டெண்டர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளன.

இருந்தும் ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பது அரசியல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சவாலான காரியமாக இருக்கும் என்று நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட அர்ஜுன் டாங்கி, இலகு ரக போர் விமானம் போன்ற உள்நாட்டுத் தயாரிப்புகள் இந்தியாவிலேயே இன்னும் படையில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காலாட் படை வீர்ர்கள் பயன்படுத்துவதற்காக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இன்சாஸ் துப்பாக்கியின் செயற்பாடு திருப்திகரமாக இல்லை என்று இராணுவம் கூறுகிறது.

இந்நிலையில் இந்தியத் தயாரிப்புகளை மூன்றாம் உலகில் உள்ள சிறிய நாடுகளுக்குத்தான் இந்தியாவால் ஏற்றுமதி செய்ய முடியும் என்ற சூழல் இருக்கிறது.

அதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. உதாரணமாக இலங்கையின் போரின் இறுதிகட்டத்தின்போது இந்தியா இலங்கைக்கு ஆயுதங்களைத் தரக்கூடாது என்ற குரல் பலமாக தமிழகத்தில் எழுந்தது. அதையடுத்து அப்போதைய மத்திய அரசு தாக்குதல் ஆயுதங்களை இலங்கைக்கு வழங்க மாட்டோம் என்று உறுதியளித்திருந்தது.

தற்போது வியட்நாம் இந்திய ஆயுதங்களை வாங்க ஆர்வம் காட்டுகிறது., ஆனால் வியட்நாமுடனான இராணுவ ஒத்துழைப்பு சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்தியா இந்த விடயத்தில் மெதுவாகவே பயணிக்கிறது.

-பிபிசி-

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *